Cyclone Maha latest updates heavy rain alert given to 23 districts : கன்னியாகுமரி அருகே அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. அந்த புயலுக்கு மஹா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. லட்சத்தீவு - தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது அந்த புயல்.
Advertisment
கனமழை எச்சரிக்கை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை,திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisment
Advertisements
கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை, காஞ்சி மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி வரும். புதுவையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை :
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணியில் 19 செ. மீ மழை பதிவாகியுள்ளது. திருவாள்ளூரின் ஆர்.கே.பேட்டையில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நெல்லையின் பாபநாசம், மணிமுத்தாறு, வேலூரின் சோளிங்கர், திருவண்ணாமலையின் கலசபாக்கம் ஆகியப்பகுதிகளில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடியின் ஒட்டப்பிடாரம் பகுதியில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூரின் திருத்தணி, விழுப்புரத்தின் திண்டிவணம் பகுதியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டம், சேரன்மாதேவி, விளாத்திக்குளம் பகுதிகளில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
1 மணி நிலவரம்
இன்று மதியம் தீவிரப்புயலாக மாறும் மஹா மத்திய கிழக்கு அரபி கடலை நோக்கி நகருகிறது . 33 இடங்களில் கனமழை பெய்துள்ளது. நான்கு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கொடநாட்டில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குன்னூரில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அநேக இடங்களில் நாளை மழை பெய்யும் என்று அறிவித்துள்ளார் சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன். நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அவர் அறிவித்தார். 4ம் தேதி வடக்கு அந்தமான் பகுதிகளில் குறைந்த அழுத்த தாழ்வு நிலை உருவாகும். அது வடமேற்காக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெரும் என்பதால் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.