நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை : கஜ புயல் காரணமாக தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. மின் வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை பெறுவதில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை
தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சி அமைப்பினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற நிவாரணப் பணிகளை மீட்புப் பணிகள் மேற்கொள்ளும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். நடிகர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் நிவாராண நிதிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அளித்து வருகின்றனர்.
கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது, பிரதமர் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். ஆனால் டெல்டா பகுதிகளை பார்வையிட எந்த மத்திய அமைச்சர்களும் வரவில்லை என்ற வருத்தம் மக்களுக்கு இருந்தது.
இந்நிலையில் நாளை தமிழகம் வருகிறார் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். நாளை நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களையும், நாளை மறுநாள் தஞ்சாவூர் மாவட்டத்தினையும் ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன் என தமிழிசை சௌந்தரரஜன் கூறியிருக்கிறார்.
டெல்லியில் இருந்து சரக்கு கட்டணம் ஏதுமில்லாமல் நிவாரணப் பொருட்களை அனுப்ப :
டெல்லியில் இருக்கும் தமிழர்கள் நிவாரணப் பொருட்களை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றால் தமிழ்நாடு பவனில் தரலாம் என்றும், அவை ஏர் இந்தியா மூலம் சரக்கு கட்டணம் ஏதுமின்றி கஜாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க : கஜ நிவாரணப் பணிகளை மேற்கொண்டு உயிரிழிந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி