scorecardresearch

தருமபுரி அருகே யானை தாக்கி இளைஞர் மரணம்: காரை பந்தாடிய காட்டு யானைகள்

தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரை தும்பிக்கையால் தாக்கியதில், காரின் பக்கவாட்டு பகுதி சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்

யானை தாக்கியதில் உயிரிழந்த ராம்குமார்; சேதமடைந்த கார்
யானை தாக்கியதில் உயிரிழந்த ராம்குமார்; சேதமடைந்த கார்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள், நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்தன.

இந்நிலையில், பாரூர் அருகே காட்டுக் கொல்லை கிராமத்தை சேர்ந்த எல்லப்பன் என்பவரது மகன் ராம்குமார் இன்று (14-ம் தேதி) காலை மோட்டுப்பட்டி அருகே உள்ள மலையடிவாரத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

இதையும் படியுங்கள்: சென்னை; கதவை தட்டிய பெண் போலீஸ்.. தாக்கிய போதை ஆசாமி

அப்போது மலையடிவாரப் பகுதியில் சுற்றித் திரிந்த 2 காட்டு யானைகளைப் பார்த்த ராம்குமார், அதனை தனது செல்போனில் படம் பிடிக்க முயன்றார். மேலும், செல்பி எடுக்க முயன்றார். இதைப் பார்த்த காட்டு யானைகள் ராம்குமாரை துரத்தி தாக்கியதில் படுகாயம் அடைந்த ராம்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், நிகழ்விடத்திற்கு வந்த பாரூர் போலீஸார், ராம்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மோட்டுப்பட்டி மலையடிவாரத்தில் இருந்த 2 காட்டுயானைகள், அகரம் மருதேரி ஏரியில் வந்து நீரில் இறங்கின. வனத்துறையினர் யானைகளை பட்டாசுக்கள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் அங்கிருந்து தட்ரஅள்ளி வழியாக விரட்டினர். அப்போது சப்பாணிப்பட்டி அருகே தருமபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து பாலக்கோடு வனப்பகுதிக்கு யானைகள் சென்றன.

முன்னதாக சாலையை கடக்கும் போது தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரை தும்பிக்கையால் தாக்கியதில், காரின் பக்கவாட்டு பகுதி சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

யானைகள் பாலக்கோடு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால், பாலக்கோடு, காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், யானைகள் நடமாட்டம் குறித்து தகவலறிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறும், அதற்கு மாறாக விரட்டுவது, கல் வீசுவது, செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோடைகாலம் துவங்கியதால் தர்மபுரி மாவட்ட பகுதியில் யானைகள் உணவுக்காகவும், தாகத்திற்காகவும் தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வாழும் இருப்பிடங்களை தேடி வரத் துவங்கி உள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dharmapuri youth killed by wild elephants attack