சென்னையில் நாளை நடைபெறும் வாஜ்பாய் புகழஞ்சலி கூட்டத்தில் திமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரும், அதிமுக சார்பில் எம்.பி.கனிமொழியும் பங்கேற்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான ஏ.பி.வாஜ்பாய் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
கடந்த ஜூன் மாதம் அவருக்கு சிறுநீர் தொற்று, சிறுநீரகப் பிரச்சினை, மார்பு சளி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் வாஜ்பாய்க்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில், அவர் ஆகஸ்ட் 16-ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். 17-ம் தேதி அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி சேகரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள நதிகள், கடலில் கரைக்கப்பட்டது.
இந்நிலையில், வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி செலுத்தும் கூட்டம் சென்னையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக அமைச்சர் ஜெயக்குமார், திமுக எம்.பி.கனிமொழி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இதனை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பொதுவாக, திமுக - அதிமுக கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் எந்த நிகழ்வாக இருந்தாலும், அதில் ஒன்றாக கலந்து கொள்வதை காண்பது என்பது மிகவும் அபூர்வமான விஷயமாகும். கருணாநிதி - ஜெயலலிதா என்ற வெறுப்பு அரசியலின் வழிகாட்டுதல் இதுவரை அப்படியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் இரு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் நெருக்கமாக இருந்தாலும், பொதுவெளியில் அது கடுகளவு கூட வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருப்பார்கள்.
இப்படியொரு சூழ்நிலையில், நாளை வாஜ்பாய் புகழஞ்சலி கூட்டத்தில், திமுக சார்பில் எம்.பி.கனிமொழியும், அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரும் கலந்து கொள்வார்கள் என தமிழிசை தெரிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது.
வாஜ்பாய் எனும் தேசியத் தலைவரின் புகழஞ்சலி நிகழ்ச்சி என்பதால் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைகள் இதில் கலந்து கொள்ளவிருக்கின்றன. மேடையில் ஒருவருக்கொருவர் எப்படி சந்தித்துக் கொள்வார்கள் என்பது ஊடகங்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக உள்ளது.
மேலும் படிக்க - கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவில்லை!