சட்டமன்ற மசோதாக்களை கிடப்பில் போட்டு வரும் தமிழக ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கண்டனப் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
கூட்டத்தில் திராவிட கழகத் தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இதையும் படியுங்கள்: போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடுதான் மு.க. ஸ்டாலின் இலக்கு; வீடியோ வெளியிட்ட உதயநிதி
இறுதியாக கூட்டத்தில் பேசிய எம்.பி கனிமொழி, இந்த கண்டன பொதுக்கூட்டம். முதல் செய்தி. இது போராட்டமாக மாறும். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் விவகாரம் தொடர்பாக, பா.ஜ.க அல்லாத மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கலைஞர் 1955 ஆம் ஆண்டிலே கவர்னர் பதவி தேவையில்லை என்று கூறியுள்ளார். அம்பேத்கரும் கவர்னர் பதவி தேவையில்லை என்று கருதினார். ஆளுநர் இருக்கும் இடத்தைப் புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும். இல்லையென்றால் பெரியாரின் தமிழ் மண் உங்களுக்குச் சொல்லித் தரும்.
ஆளுநர் தமிழ்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இயற்றிய சட்டங்களை கிடப்பில் போட்டுள்ளார். தன்னுடைய கையெழுத்து தான் பெரிது என நினைத்து வருகிறார். மத்திய அரசு பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களை முடக்கி வருகிறது. ஆளுநர்களை வைத்து அடக்கப் பார்க்கிறது. எனவே ஆளுநர் பதவியே வேண்டாம் என தி.மு.க போராடிக் கொண்டிருக்கிறது. ஆளுநர் மாளிகை வழங்கப்பட்ட நிதி செலவழிக்கப்பட்டதில் முறைகேடு உள்ளதை நமது நிதியமைச்சர் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ், திராவிடம், தமிழ்நாடு, கார்ல் மார்க்ஸ் என தமிழர்கள் கொண்டாடும் எல்லாவற்றையும் ஆளுநர் கொச்சைப்படுத்தி வருகிறார். தூத்துக்குடி சம்பவத்தை வெளிநாட்டு நிதி மூலம் நடந்தது என ஆளுநர் கொச்சைப்படுத்தியிருக்கிறார். இவ்வாறு கனிமொழி பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil