வேலூரிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் ஒரு போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை அரசுக்கு பெருத்த நெருக்கடியாக உருவாகியுள்ளது. இதனை சரி செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று அதற்கான திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமென்று அதிமுக தலைமை அறிவித்ததையடுத்து இன்று பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் யாக பூஜை நடைபெற்றது.
இந்நிலையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடிநீரை முழுமையாக வினியோகிக்க , குடிநீர் திட்டப் பணிகளுக்காக 200 கோடியை கூடுதலாக ஒதுக்கி நேற்று உத்தரவிட்டார். மேலும் அந்தக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக தினமும் 10 மில்லியன் குடிநீரை சென்னைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள தண்ணீர் பிரச்சனையை தமிழக அரசு மெத்தனமாக கையாளுகின்றது என்று திமுக மாவட்டம் முழுவதும் போராட்டத்தை இன்று முதல் நடத்தி வருகின்றது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் பொருளாளர் துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் சென்னைக்கு எடுத்து சென்றால் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
read more.. துரைமுருகனின் கருத்துக்கு அதிமுக அமைச்சர்கள் விளக்கம்!
தொடர்ந்து பேசிய அவர், “தண்ணீர் பிரச்சினை குறித்து சட்டசபையில் திமுக எடுத்துரைக்கும். ஆளும் அரசிடம் மக்கள் முறையிடுகிறார்கள். ஆனால் அரசோ ஆண்டவனிடம் முறையிடுகிறது. கடவுளிடம் முறையிடுவதன் மூலம் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை அரசு ஒப்புக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், "ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல நான் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியாகும் தகவல் தவறு. ஒரு தவறான பிரசாரம் மூலம் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை கண்டிக்கிறேன்" என்று இச்சம்பவம் குறித்து துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.