scorecardresearch

தி.மு.க முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு; தம்பி மகள் கைது

மஸ்தானின் தம்பி ஆதாம்பாஷாவை போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் தனது மகள் ஹரிதா ஷாஹினா கொலையில் தனக்கு உடந்தையாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்

தி.மு.க முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு; தம்பி மகள் கைது
தி.மு.க முன்னாள் எம்.பி மஸ்தான் மற்றும் அவரது தம்பி மகள் ஹரிதா ஷாஹினா

தி.மு.க முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி மகள் ஹரிதா ஷாஹினா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி இரவு தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவரும், முன்னாள் எம்.பியுமான மஸ்தான் மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியானது.

இதையும் படியுங்கள்: 2-வது தர்மயுத்தம் தொடக்கம்… அவரின் பெயரை உச்சரிக்க கூட விரும்பவில்லை; ஓ.பி.எஸ் பேச்சு

இந்தநிலையில், மஸ்தான் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது மகன் ஹரிஸ் ஷாநவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த மஸ்தானின் முகத்தில் காயம் இருந்ததால் கூடுவாஞ்சேரி போலீசார் இந்த வழக்கை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தச் சம்பவத்தில், மஸ்தானின் உறவினர்களே அவரைத் திட்டமிட்டுக் கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் மஸ்தானின் டிரைவராக இருந்த அவரது தம்பி மருமகன் இம்ரான் பாஷா, மஸ்தானின் உறவினரான சுல்தான், அவரது நண்பர்கள் நசீர், தவ்பீக், லோகேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இம்ரான் பாஷா, முன்னாள் எம்.பி மஸ்தானிடம் 15 லட்சம் வரை கடனாக பெற்று இருந்த நிலையில், அதனை மஸ்தான் திரும்பக் கேட்டு வந்ததால் தனது நண்பர்களுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி மஸ்தானை தனியாக காரில் அழைத்துச் சென்று மூச்சுத் திணற வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

அதன் பின் நெஞ்சுவலியால் மஸ்தான் இறந்ததாக வெளியில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மஸ்தானை கொலை செய்ய திட்டமிட்ட இம்ரான் பாஷா, மூச்சு திணறல் மூலம் மாரடைப்பை ஏற்படுத்துவது எப்படி என இணையத்தில் தேடியது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் தொடர் விசாரணையில், மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி கௌசே ஆதாம்பாஷாவும் கைது செய்யப்பட்டார். மஸ்தான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டிரைவர் இம்ரான் பாஷாவுடன் மஸ்தானின் தம்பி கௌசே ஆதம்பாஷா செல்போனில் அதிக நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த போலீசார் ஆதம்பாஷாவினை கைது செய்தனர்.

காவல்துறையினரிடம் ஆதாம்பாஷா வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில், 15 லட்சம் ரூபாய் கடனைத் திரும்பக் கேட்டதால், நண்பர்களின் உதவியுடன் அண்ணனைக் கொன்றதாக கூறியுள்ளார். இதனால், பூர்வீக சொத்து தகராறு மற்றும் பணப் பிரச்சனையே மஸ்தான் கொலைக்கு முக்கியக் காரணம் என்று தெரியவந்தது.

இந்நிலையில், மஸ்தானின் தம்பி ஆதாம்பாஷாவை போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் தனது மகள் ஹரிதா ஷாஹினா (26) கொலையில் தனக்கு உடந்தையாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் ஹரிதா ஷாஹினாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது வரை மஸ்தான் கொலை வழக்கில், அவரது தம்பி, தம்பி மகள், மருமகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmk ex mp mastan murder case brothers daughter arrested

Best of Express