DMK Leader Karunanidhi health: திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று திடீரென உடல்நலத்தின் நலிவு ஏற்பட்டது. வயதின் காரணமாக அவருக்கு ஏற்பட்ட சிறுநீர் தொற்றால் அவரின் உடல்நலம் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. இவரை சந்திக்க பல்வேறு கட்சித் தலைவர்கள் நேற்று கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க அரசியல் தலைவர்கள் கோபாலபுரம் வருகை:
சமீபத்தில் 94வது பிறந்தநாளை கொண்டாடிய திமுக தலைவர் கருணாநிதிக்கு வயதின் காரணமாக கடந்த 2 நாட்களாக உடல்நிலை சீராக இல்லாத நிலை இருந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென அவரின் உடல்நலத்தில் நலிவு ஏற்பட்டது. இது குறித்து அவர் சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிவிப்பில், “சிறுநீர் தொற்று ஏற்பட்டதன் காரணமாகவும், வயதின் காரணமாகவும் கருணாநிதியின் உடல்நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு கோபாலப்புரம் இல்லத்தில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருந்தனர். இதனால் நேற்று இரவு முதல் அப்பகுதியில் தொண்டர்கள் ஏராளமானோர் குவியத் தொடங்கியுள்ளனர்.
கருணாநிதி உடல் நலம் பாதிப்பு Live Updates: கோபாலபுரம் வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள்!
இந்த அறிவிப்பை தொடர்ந்து கோபாலப்புரம் இல்லத்தில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை மற்றும் உயர்ரக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் செய்தித் தொகுப்பு.
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் முதல்முறையாக அதிமுக தலைவர்கள்: ‘கலைஞர் நன்றாக இருப்பதாக’ பேட்டி
நேற்று இரவு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அவருடன் அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்து கருணாநிதியை சந்தித்தனர். இவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.
பின்னர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார்.
கோபாலப்புரம் இல்லத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்லும்பொழுது, பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது, “நாங்கள் அவரை சந்தித்தோம், அவர் நன்றாக இருக்கிறார்.” என்று துணை முதல்வர் கூறினார். பின்னர் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “நாங்கள் அவரை பார்த்தோம் எங்களை அடையாளம் கண்டுக்கொண்டார். விரைவில் அவர் உடல்நலம் பெற்று வர வேண்டும் என்று கூறினோம்” என்றார். மேலும் இந்த சந்திப்பு அரசியல் பண்பாட்டின் காரணமாக நடந்தது என்று கூறினார்.
இவர்களை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சென்று சந்தித்தார்.
கோபாலப்புரம் இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல்நலம் குறித்து திருமாவளவன் விசாரித்தார்
அப்போது, “‘சிறிது காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிர்ச்சி அடையக்கூடிய அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலை மோசமாக இல்லை. அவரது உடல் நிலை குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. அதை யாரும் நம்ப வேண்டாம்’’ என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கருணாநிதியை நேரடியாக சென்று சந்தித்தார்.
கருணாநிதி உடல்நிலை பற்றி ஜி கே வாசன் விசாரித்தார்
இவர்களை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் பற்றி மு.க. ஸ்டாலினிடம் பேசினார்.
கோபாலபுரத்தில் கமல் ஹாசன்
இவர்களை தொடர்ந்து இன்று காலை வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் மதிமுக தலைவர் வைகோ வருகை தந்தனர்.
கோபாலபுரம் கருணாநிதி இல்லத்திற்கு வருகை தந்த வேல்முருகன் மற்றும் வைகோ
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, கருணாநிதியின் உடல்நலம் பற்றி ஸ்டாலின் மற்றும் கனிமொழியுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலப்புரத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.