DMK MLA KK Selvam to Join BJP: சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு காலமானார். இதனால், மேற்கு மா.செ. பதவி காலியானதால், அங்கே பொறுப்பாளராக கட்சியின் சீனியர் ஒருவரை நியமிக்க வேண்டுமென கட்சியினர் வலியுறுத்தி வந்தார்கள்.
Advertisment
இந்த நிலையில், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக, உதயநிதிக்கு நெருக்கமான இளைஞரணி சிற்றரசுவை நியமித்திருக்கிறது அறிவாலயம். சீனியர்களான பகுதி செயலாளர்கள் பலர் இருக்கும் நிலையில், உதயநிதியின் சிபாரிசு காரணமாக சிற்றரசு நியமிக்கபட்டதாக கூறப்படுகிறது.
திமுக-வை பொறுத்தவரை கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி என்பது வலிமையானது. அதனால் தான், அந்த பதவிக்கு போட்டி ஏற்பட்டது. ஆனால் அதிகம் வெளியே தெரியாத முகமான சிற்றரசுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனால் மூத்த நிர்வாகிகள் பலரும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.
இதன் காரணமாகவே, கு.க.செல்வம் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் கு.க.செல்வம், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். தற்போது திமுக சார்பில் போட்டியிட்டு ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக நேற்றிரவே, அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின
ஸ்டாலின் அவசர ஆலோசனை
இதனையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கட்சியின் மூத்த முக்கிய தலைவர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஆர்எஸ் பாரதி, நேரு உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கு.க. செல்வம் விளக்கம்
டெல்லியில், ஜே.பி.நட்டாவைச் சந்தித்த கு.க.செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் பாஜகவில் இணையவில்லை. எனது தொகுதி பிரச்சனைக்காக நட்டாவை சந்தித்து பேசினேன். தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்.
திமுகவில் உள்கட்சி தேர்தலை மு.க.ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். என் மீது திமுக நடவடிக்கை எடுத்தால் சந்திக்க தயார்" என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil