போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி 2 கோடியே 80 லட்சம் பெற்று மோசடி செய்ததாக கூறி மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மேல் விசாரணை மேற்கொண்டுள்ள காவல் துறையினர், அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை செய்தனர். மந்தைவெளி வீடு சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து, தனக்கு முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அரசியல் விரோதம் காரணமாக தன் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க தயாரிக்க உள்ளதாகவும் எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரானைக்கு வந்தபோது, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், பணம் கொடுத்த 238 பேர் அளித்த புகாரில் அவர்கள் ஏமாந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும், தற்போது செந்தில்பாலாஜி தலைமறைவாக இருப்பதாகவும் அவரை கைது செய்து காவலில் வைத்து விசாரிக்கும் அவசியம் இருப்பதால் முன் ஜாமீன் வழங்க கூடாது என ஆட்சேபனை தெரிவித்தார்.
செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பரணிக்குமார், அரசியல் விரோதம் காரணமாக பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மனுதரார் தலைமறைவாகவில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் வாதிட்டார். மேலும் புகார் அளித்த எவரும் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறாத நிலையில், தன்னை கைது செய்யும் நோக்குடன் காவல்துறை செயல்படுவதாக வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆதிகேசவலு முன் ஜாமீன் மனு மீது இன்று பிறப்பித்த உத்தரவில், செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் வேண்டும், விசாரணைக்கு தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். மத்திய குற்றப்பரிவு காவல்துறையிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்துள்ளார். மேலும் ஆவணங்களை அழித்தல் மற்றும் சாட்சிகளை கலைக்கக் கூடாது என்றும், தலைமறைவாக கூடாது என்றும் செந்தில்பாலாஜிக்கு உத்தரவிட்டார்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஏ.நடராஜன், விசாரணையின் போது குற்றச்சாட்டுக்கு முகந்திரம் இருப்பதாக கருதினால் அவரை கைது செய்ய முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.
விசாரணையின்போது செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என கருதினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.