சுய அறிவு உள்ளவர்கள் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க மாட்டார்கள் என, விமானத்தில் எமர்ஜென்சி கதவு அருகே பயணம் செய்த தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பா.ஜ.க இளைஞரணி தேசியத் தலைவரும், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உடன் திருச்சி புறப்பட்டப்போது, சென்னை விமான நிலையத்தில், இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு முன்பு அவசரகால வெளியேறும் கதவைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: ஈரோடு கிழக்கில் பா.ம.க போட்டி இல்லை; யாருக்கும் ஆதரவு கிடையாது: அன்புமணி அறிவிப்பு
இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, விமானத்தில் அவசர வழி கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் தவறுதலாக கதவு திறக்கப்பட்டதாக தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டு விட்டதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம் அளித்தார்.
இந்தநிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ”விமானத்தின் கதவை தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை. எமர்ஜென்சி கதவில் இருந்த இடைவெளியை பார்த்ததும் விமானப் பணியாளர்களை அழைத்துக் கூறினார். இதை நானும் பார்த்தேன். அவர் தவறு செய்யவில்லை என்றாலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அவர் எம்.பி என்ற பொறுப்பில் இருப்பதால் மன்னிப்பு கோரினார்,” என்று கூறினார்.
இந்தநிலையில், இன்று இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”இன்று கோவைக்கு விமானத்தில் பயணம் செய்கிறேன். எனக்கு எமர்ஜென்சி கதவுக்கு அருகே இருக்கை கிடைத்துள்ளது. ஆயினும் நான் எமர்ஜென்சி கதவை திறக்கப்போவதில்லை. ஏனென்றால், அப்படி திறந்தால் நான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும். மேலும் பயணிகளுக்கும் அது ஆபத்து. அதுமட்டுமல்லாமல் சுய அறிவு உள்ளவர்கள் இந்த காரியத்தை செய்யமாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் எனக்கும் பயணிகளுக்கும் பயணம் நேரம் 2 மணி நேரம் மிச்சமாகும். இதனை அனைவரும் கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil