திமுக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ரூ .89.1 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் முடக்கி பறிமுதல் செய்தது.
ஜெகத்ரட்சகனும் அவரது மகன் சுந்தீப் ஆனந்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல், சிங்கப்பூர் நிறுவனமான சில்வர் பார்க் இண்டெர்நேஷனல் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தில் முறையே 70,00,000 மற்றும் 20,00,000 பங்குகளை வாங்கியது விசாரணையில் கண்டறியப்பட்டதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்தது.
1999 வருட அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (ஃபெமா ) பிரிவு 37 (ஏ) இன் கீழ் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன . ஃபெமா சட்டம் பிரிவு 4ன் கீழ், சட்டவிரோதமாக சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதற்கு இணையாக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், வீட்டு மனை, வீடு மற்றும் அவர்களது வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


சிங்கப்பூர் நிறுவனமான சில்வர் பார்க் இண்டெர்நேஷனல் பிரைவேட் லிமிட்டடுடன், ஓமன் அரசின் கச்சா எண்ணெய் அமைச்சகம் இணைந்து இலங்கையில் கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதாக செய்திகள் வெளியாகின.
சிங்கப்பூரின் கணக்கியல் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்திடம் (Accounting and Corporate Regulatory Authority) முறையாக சில்வர் பார்க் இண்டர்நேசனல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருவதாகவும், அதன் நான்கு இயக்குநர்களில் சுந்தீப் ஆனந்த ஜெகத்ரட்சகன், ஸ்ரீநிஷா ஜெகத்ரட்சகன் அனுசியா ஜெகத்ரட்சகன் ஆகியோர் அடங்குவர் என்றும் கூறப்பட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil