நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக இருந்த அப்துல் வஹாப்-ஐ அப்பொறுப்பில் இருந்து நீக்கியும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியும் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக இருந்த அப்துல் வஹாப் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் மைதீன் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க மனு; அண்ணாமலை ஆளுநருடன் 20 நிமிடம் சந்திப்பு
இதுதொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் அப்துல் வகாப் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டி.பி.எம்.மைதீன்கான் திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, மாநகர நிர்வாகிகள் இவருடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினராக உள்ள அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி பணிகளை மேற்கொள்ளவிடாமல் இடையூறு செய்து வருவதாக புகார்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் தி.மு.க மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக மதுரை மிசா பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பையும் தற்காலிமாக நீக்கி வைக்கப்படுகிறார்,” என்று கூறப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 54வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் நூர் ஜஹான். இவர் மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நூர்ஜஹான், தனது வார்டு பிரச்சனை குறித்து மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வியிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த பாண்டிச்செல்வியின் கணவரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியன், நன்றி மட்டும் தான் சொல்லணும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது எனக் கூறியதாகவும், அதற்கு தி.மு.க பெண் கவுன்சிலரான நூர்ஜஹான், அப்படியெல்லாம் தன்னால் போக முடியாது என்றும், தனது வார்டு பிரச்சனையைப் பற்றி தாம் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள் எனக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு நடந்த வாக்குவாதம் முற்றி பஞ்சாயத்து, காவல் நிலையம், மதுரை மாநகர தி.மு.க செயலாளர் கோ.தளபதி, அமைச்சர்கள் பி.டி.ஆர், மூர்த்தி ஆகியோர் வரை சென்றது. இந்தநிலையில் மிசா பாண்டியன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil