திமுக குழு எடுத்துரைத்த விஷயங்களை கவனமாக கேட்டறிந்தார் குடியரசு தலைவர் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்தித்தார் திமுக எம்.பி , டி.ஆர் பாலு. இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்தித்தார். இந்நிலையில் அவர் பேசியதாவது: ஒப்புதல் அளித்த உரையை ஆளுநர் மாற்றி பேசியது பேரவை விதிகளுக்கு முரணானது.மேலும் ஒப்புதல் அளித்த உரையில் அவர் சில வார்த்தைகளை தவிர்த்தும் மற்றும் சேர்த்தும் பேசியுள்ளார். திமுக குழு எடுத்துரைத்த விஷயங்களை கவனமாக கேட்டறிந்தார் குடியரசு தலைவர். ஆளுநருக்கு எதிரான மனுவை சீல் செய்யப்பட்ட கவரில் குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ளோம் ,
குடியரசுத் தலைவர் சந்தித்ததால், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்கான அவசியம் இல்லை. ஆளுநர் ஆர்.என் ரவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் சனாதன கொள்கையை திணிக்க ஆளுநர் ரவி முயற்சிக்கிறார். மேலும் நாடாளுமன்றத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக குரல் எழுப்புவோம். என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தை மீறி தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தி.மு.க குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் புகார் அளித்துள்ளது.
கடந்த 9 ஆம் தேதி நடந்த தமிழக சட்டமன்றத்தின் ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுனர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட உரையில் சில பகுதிகளை தவிர்த்துவிட்டு ஆளுனர் உரையாற்றினார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர, ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார்.
இதையும் படியுங்கள்: கவர்னர் மாளிகையில் முதல்முறையாக சர்வ மத தலைவர்களை அழைத்து பொங்கல் விழா: ஆர்.என் ரவி ஏற்பாடு
இந்தநிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பி. வில்சன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் அடங்கிய தி.மு.க குழு குடியரசு தலைவரை சந்தித்து ஆளுநர் மீது புகார் அளித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு தமிழகம் என்ற பெயர் தான் பொருத்தமானது, சனாதான தர்மம், எந்த ஒரு அரசும் மதச்சார்பற்ற அரசாக இருக்க முடியாது உள்ளிட்ட கருத்துகளை ஆளுனர் தெரிவித்து வருகிறார், நீட் விலக்கு மசோதா, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்டவைகளுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என தி.மு.க அரசு தரப்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தை மீறி ஆளுனர் செயல்படுகிறார், அவருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என தி.மு.க தரப்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil