மருத்துவர் உடலை மயானத்தில் அடக்கம் செய்வதை எதிர்த்து கலவரம் செய்ததாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலஸ் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், வாகனத்தை தாக்கியும், அரசு ஊழியர்களை தாக்கியும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 22 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 17 வயது சிறுவன் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டவர்களில் இளங்கோ, லோகேஷ்வரன், செந்தில்குமார், அண்ணாமலை, ஆனந்த், சோமசுந்தரம், குமார், மணிகன்டன், காதர் மொய்தீன் மற்றும் நிர்மலா ஆகிய 10 பேர், தங்களை வழக்கில் தவறுதலாக காவல்துறை சேர்த்து விட்டதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர். செல்வகுமார், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை மீறி அனைவரும் ஒன்றாக கூடி கலவரத்தில் ஈடுபட்டனர் என்பதற்கான முகாந்திரம் உள்ளது. குற்றத்தின் அடிப்படையில் குற்றவாளிகளிக்கு ஜாமீன் வழங்கினால் இதை முன்னுதாரணமாக வைத்து வேறு பிரச்சனை மூலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனைவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”