செங்கல் மற்றும் மண்பாண்டங்கள் தயாரிப்பிற்கான மண் எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் செல்லாமல், கனிம வளத்துறை இயக்குனரிடம் அனுமதி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் செங்கல் தயாரிப்புக்கு தேவையான மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டியது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது மண் எடுப்பதற்கு அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் இத்தொழிலை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உறுப்பினர்கள் வலிறுத்தினார்கள்.
இதையும் படியுங்கள்: வடபழனி கோவிலின் ரூ100 கோடி மதிப்பு நிலம்; பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் அபகரித்ததாக அறப்போர் இயக்கம் புகார்
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு.க எதிர்கட்சியாக இருந்த போதே முதலமைச்சரிடம் மண் பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பின்பு இந்த விவகாரம் தொடர்பாக எத்தனை முறை சங்கத்துடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருப்பேன் என்று கணக்கிடமுடியாது. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் நிர்வாகிகளிடம் ஆலோசித்து சில திட்டங்களை வகுத்து இருக்கிறோம்.
மண்பாண்டம் செய்பவர்களுக்கு 800 மாட்டு வண்டிகள் வரை இலவசமாக மண் எடுத்துக் கொள்ளவும், 60 மீட்டர் பரப்பளவு வரை உள்ள ஒரு இடத்தில் மண் எடுத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களை சீர்திருத்தம் செய்யும் போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று கட்டணம் செலுத்தி மண் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல வகைகளில் மண் எடுப்பதற்கு அனுமதி இருந்தாலும், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்குவதில் தான் பிரச்சனை வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஆட்சியர் அனுமதி வழங்காததால் கடந்த காலங்களில் அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்காமல் போனது. தற்போது இந்த மூன்று மாவட்டங்களிலும் மண் எடுக்கலாம் என்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மண் எடுக்க மாவட்ட ஆட்சியர் இல்லாமல், கனிம வள கூடுதல் இயக்குநர் அனுமதி கொடுத்தாலே போதும் என்ற வகையில் அனுமதி முறையை எளிமைப்படுத்தி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனுமதி கோரி விண்ணப்பத்தில் உள்ள விண்ணப்பங்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனுக்குடன் அனுமதி வழங்குவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் செங்கல் உற்பத்தியை அதிகரிக்கவும் செங்கல் விலையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil