Advertisment

வருங்கால தலைவர் ஆகும் தகுதியில் உதயநிதி: நீட் எதிர்ப்பு உண்ணாவிரதத்தில் துரைமுருகன் பேச்சு

உதயநிதியின் காலத்தில் நீட் தேர்வு ஒழிந்தது, அதற்குக் காரணமாக இருந்தவர் உதயநிதி என்கிற வரலாறு சரித்திரத்தில் இடம்பெறும் – உண்ணாவிரதத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

author-image
WebDesk
New Update
Duraimurugan at NEET protest

உதயநிதியின் காலத்தில் நீட் தேர்வு ஒழிந்தது, அதற்குக் காரணமாக இருந்தவர் உதயநிதி என்கிற வரலாறு சரித்திரத்தில் இடம்பெறும் – உண்ணாவிரதத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

இயக்கத்தில் இரண்டு பெரும் தலைவர்களோடும் இருந்த நான், வருங்காலத்தில் தலைவராக இருக்கக்கூடிய தகுதியோடு அமர்ந்துள்ள உதயநிதியோடு சேர்த்து மூன்று பேரையும் பாராட்டி பேசுகிறேன், என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Advertisment

நீட் தேர்வுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தி.மு.க.,வின் பல்வேறு அணிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க மாநாடு நடைபெறுவதால், மதுரையை தவிர்த்து தமிழகம் முழுவதும் மற்றும் பாண்டிச்சேரியில் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.,வினர் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.

இதையும் படியுங்கள்: 30 மாதங்கள் ஆகியும் நீட் விலக்கு ரகசியத்தை தி.மு.க வெளியிடாதது ஏன்? புதுச்சேரி அ.தி.மு.க கேள்வி

இதில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “நீட் தேர்வை எதிர்த்து அறப்போராட்டமாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அறப்போராட்டம் ஆதிக்கக்காரர்களால் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து நீதிக்காக நடத்தப்படும் போராட்டம். நீட் தேர்வு என்கிற கொடிய சட்டத்தை இளம் மாணவர்களின் முதுகில் சுமத்தி அவர்களை நிமிரவிடாமல் செய்வதன் மூலம் வாய்ப்பு இழந்துள்ளனர். அந்த நிலையைப் போக்க வேண்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க நீண்ட நாட்களாக வாதாடி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் அதில் இணைந்துள்ளனர். இதுபற்றி கவலையின்றி மத்திய மோடி அரசு நீட் தேர்வை திணிப்பதிலேயே வேகமாக வருகிறது.

தமிழர்களிடம் போராட்ட முறைகளில் உயிர்விடுவது முக்கியமான போராட்ட முறை. தி.மு.க-வில் ஏராளமானோர் இந்தி திணிப்பை எதிர்த்து உயிர்விட்டிருக்கிறார்கள். இன்று நீட் தேர்வை எதிர்த்து இளம் மாணவர்கள் உயிர்விட்டிருக்கிறார்கள். இந்தி திணிப்பின் போது இந்தி திணிப்பு போராட்டத்தில் உயிர்விட்டவர்களின் சாபத்தினால் அதனைத் திணித்தவர்களின் ஆட்சி பறிபோனது. அதேபோன்று இன்று நீட் தேர்வை எதிர்த்து பலர் விடுகிற சாபம் மத்திய அரசின் ஆட்சியையும் ஒழித்துவிடும்.

அகில இந்திய அளவில் தி.மு.க மட்டும்தான் நீட் தேர்வை எதிர்ப்பதாகச் சிலர் பேசுகின்றனர். இந்தி திணிப்பு எதிர்ப்பில் எப்படி தமிழ்நாடு முன்னணியில் இருந்ததோ அப்படிதான் நீட் தேர்வை எதிர்ப்பதிலும் முன்னணியில் உள்ளது. இதற்குக் காரணம் தமிழர்கள், அறிவு, உணர்ச்சி மிக்கவர்கள். நீட் தேர்வு தமிழ்நாட்டைப் பாழாக்கிவிடும் எனவும், அதனால் அதனை ஒழிக்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாகப் போராடி வருகிறோம்.

அமைச்சர் உதயநிதி தலைமை தாங்கி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு முதன்முறையாக எனக்கு ஏற்பட்டுள்ளது. 53 ஆண்டுகாலம் கலைஞரோடு இருந்த நான் அவரோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். கட்சியின் இன்றைய தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணியின் தலைவராக இருந்தாலே போதும், அதன் பின் முதல்வராக பொறுப்பேற்ற போதும் அவரோடு பல மேடைகளில் கலந்து கொண்டு வாழ்த்தி பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மாபெரும் இயக்கத்தில் இரண்டு பெரும் தலைவர்களோடும் இருந்த நான், வருங்காலத்தில் தலைவராக இருக்கக்கூடிய தகுதியோடு அமர்ந்துள்ள உதயநிதியோடு சேர்த்து மூன்று பேரையும் பாராட்டி பேசுகிறேன். இவ்வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பல்ல.

இன்று இளைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த தலைவராக இருக்கக் கூடிய உதயநிதி, நீட் தேர்வை ஒழித்துக் கட்டும் வரையில் இளம் சமுதாயம் ஓயாது எனச் சபதமேற்று, உண்ணாவிரதத்திற்குத் தலைமை தாங்கியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவரது தாத்தாவைப் போல் (கலைஞர் கருணாநிதி) எதனையும் வேகமாகச் செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர். நான் அதனைப் பலமுறை பார்த்திருக்கிறேன். உதயநிதியின் வேகம் தி.மு.க-வுக்கு உற்சாகம், இளைஞர்களுக்கும் தேவை.

உதயநிதிக்குக் கலைஞரின் வேகம் உள்ளது. மு.க.ஸ்டாலினின் திட்டமிட்டு பணியாற்றும் அனுபவம் உள்ளது. நான் 3 தலைமுறைகளைப் பார்க்கிறவன். அதனடிப்படையில் தான் நீட் தேர்வு ரத்து உதயநிதியால்தான் முடிவுக்கு வரும் எனக் கூறினேன். எனவே நீட் தேர்வுக்கு எதிரான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஏதோ ஒருநாள் இருந்தோம் என இல்லாமல் தொடர் போராட்டமாக உதயநிதி அறிவித்தார். உதயநிதியின் காலத்தில் நீட் தேர்வு ஒழிந்தது, அதற்குக் காரணமாக இருந்தவர் அமைச்சர் உதயநிதி என்கிற வரலாறு சரித்திரத்தில் இடம்பெறும். அதனைச் செய்கிற ஆற்றல் அறிவு அனைத்தையும் பெற்றிருக்கும் உதயநிதிக்கு வாழ்த்துகள்," எனத் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Udhayanidhi Stalin Neet Duraimurugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment