/tamil-ie/media/media_files/uploads/2023/08/Puducherry-ADMK-protest.jpeg)
நீட் தேர்வு விலக்கு ரகசியத்தை வெளியிட்டுவிட்டு தி.மு.க போராட்டத்தை நடத்த வேண்டும்; புதுச்சேரி அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்
30 மாத காலம் ஆகியும் இதுவரை நீட் தேர்வு விலக்கு ரகசியத்தை வெளியிடாத திராவிட முன்னேற்ற கழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை கண்டித்து புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநில கழக அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் இன்று மாலை அண்ணா சிலை பழைய பேருந்து நிலையம் அருகில், நீட் தேர்வு தொடர்பாக தி.மு.க.,வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: அ.தி.மு.க மாநாட்டில் சவுக்கு சங்கர்: நேரில் வந்தது பற்றி விளக்கம்
புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான அன்பழகன் பேசியதாவது,
/tamil-ie/media/media_files/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-19-at-21.47.18.jpeg)
கழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறும் இந்த மாநாடாகும். இந்த மாநாட்டை எங்களது பொதுச்செயலாளர் கடந்த 3 மாதத்திற்கு முன்பே மாநாட்டு தேதியை அறிவித்திருந்தார். எங்களது மாநாட்டை கண்டு பயந்த தி.மு.க.,வினர் மாநாட்டை சீர் குலைக்கவும், தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தவும், மாநாடு நடைபெறும் அதே நாளில் தீராத நீட் தேர்வு ரத்து என்ற ஒரு பிரச்சனையை கையில் எடுத்து தி.மு.க முதலமைச்சர் ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார். இது அவருடைய கீழ்த்தரமான கேவலமான சிறுபிள்ளைத்தனமான செயலுக்கு எடுத்துக்காட்டாகும்.
2013-ம் ஆண்டு மத்தியில் தி.மு.க கூட்டணி ஆட்சி இருந்த போது பாராளுமன்றத்தில் நீட் தேர்வுக்கான மசோதாவை கொண்டுவந்தது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் மருத்துவ கல்வியில் தகுதிக்கான நுழைவுத்தேர்வு நடத்த உரிய சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தை பல்வேறு மாணவர் அமைப்புகள் எதிர்த்த போது அந்த சட்டத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்றவர் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் துணைவியார் நளினி சிதம்பரம் ஆவார். தி.மு.க.,வும் காங்கிரசும் இணைந்து இந்த நாட்டில் நீட் தேர்வை கொண்டு வந்தது.
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என ஒன்றல்ல இரண்டல்ல மூன்று தலைமுறையினரும் இந்த 10 ஆண்டில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று நாடகம் ஆடி வருகின்றனர். நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நீட் ரத்து ரகசியம் எங்களிடம் இருக்கிறது என்றும், தி.மு.க.,வுக்கு வாக்களித்தால் முதல் கையெழுத்தில் நீட் ரத்து செய்யப்படும் என கூறிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 30 மாதங்கள் ஆகியும் ஏன் இன்னும் கையெழுத்திடவில்லை. நீட் விலக்கு ரகசியம் எங்களிடம் உள்ளது என்றார்களே, அதை இவ்வளவு நாட்களாக ஏன் வெளிப்படுத்தவில்லை. தற்போது அ.தி.மு.க மாநாடு நடத்தும் போது அந்த மாநாட்டை சீர்குலைப்பதற்காக திடீரென்று நீட் ரத்து என்ற எண்ணம் ஸ்டாலின் அவர்களுக்கு உதித்துள்ளது போலும். முதலில் நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் உங்களுக்கு உள்ளதா?
தி.மு.க.,வின் பொய்யை நம்பி தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். மாணவர்களின் மரணத்தில் தி.மு.க அரசியல் நடத்துகிறது. தி.மு.க.,வை நாடு கூட மன்னிக்காது. நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் கேட்கிறார். 10-ம் வகுப்பிலும் 12-ம் வகுப்பிலும் படிக்கும் மாணவர்கள் கூட பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்காக 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வை ஸ்டாலின் ரத்து செய்துவிடுவாரா? யாரை ஏமாற்றுகிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
1974-ல் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி இருந்த போது நம் தமிழ் மாநில சொத்தான கட்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரைவார்த்தது. மத்திய காங்கிரஸ் அரசின் இந்த தகாத செயலை அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஒரு சிறு எதிர்ப்பை கூட காட்டாமல் அமைதிகாத்தார். இன்று அவரது புதல்வர் ஸ்டாலின் கட்சத்தீவை மீட்போம் என்று வாய்சவடால் அடிக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-19-at-21.47.19.jpeg)
கடந்த பல வருடங்களாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க.,வும், காங்கிரசும் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்காமல் மக்களை வஞ்சித்தனர். ஆனால் இன்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து ரங்கசாமியால் பெற முடியாது என்று சவடால் விடுகிறார். மத்தியில் இந்த நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிற்கு அருகில் உயர் பதவியில் இருந்த நாராயணசாமி ஏன் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்தை பெற்றுத்தரவில்லை. தலைமுறை தலைமுறையாக ஏமாற்று அரசியலை தி.மு.க.,வும், காங்கிரசும் செய்கின்றனர்.
நாளை தி.மு.க நீட் தேர்வு விலக்குக்காக உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளது. உண்மையில் தி.மு.க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர்களுக்கு தன்மானம் என்று ஒன்று இருந்தால் நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை வெளியிட்டு விட்டு இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்த வேண்டும். நீட் தேர்வு சம்பந்தமாக மரணம் அடையும் மாணவர்களின் மரணத்திற்கு தி.மு.க.,தான் காரணமாகும். தி.மு.க.,வின் பொய்யான பசப்பு வார்தத்தைகளை மாணவ மாணவிகள் நம்பாமல் ஆண்டுதோறும் தங்களை நீட் தேர்வுக்காக தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்குமார் சேகர், நாகமுத்து, தலைவர் கருணாநிதி, கண்ணன், சுரேஷ்குமார் திரளாக கலந்து கொண்டனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.