சீர்காழி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை துர்கா ஸ்டாலின், சபரீசன், செந்தாமரை உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்று நடத்தி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு இந்தக் கோவில் குலதெய்வமாக உள்ளது. இதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் தந்தை ஜெயராமனின் குலதெய்வ கோவிலும் இது தான். இக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டு நிறைவடைந்து விட்டதால், துர்கா ஸ்டாலின் உதவியுடன் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு புதிதாக கோவில் கொடிமரம் விநாயகர், ராகு, கேது, பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த சீமான்: இஸ்லாமிய நிர்வாகி முகமது மடியில் மகனுக்கு மொட்டை
இந்த விழாவில் துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், ஸ்டாலினின் மைத்துனர் ராஜாமூர்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி பூர்வாங்க பூஜைகளும், முதல் கால யாகசாலை பூஜையும் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து ராஜகோபுரம், அம்பாள், பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தன. புனித நீர் அடங்கிய குடங்களுடன் துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் கோவிலை வலம் வந்தனர்.
அதனையடுத்து துர்கா ஸ்டாலின் கொடியசைக்க சிவாச்சாரியார்கள் பூஜை செய்யப்பட்ட புனித நீரை விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
கும்பாபிஷேகத்தில் நடிகர் சந்திரசேகர், அமைச்சர் மெய்ய நாதன், எம்.எல்.ஏ.,க்கள் பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம், ஆட்சியர் லலிதா, எஸ்.பி நிஷா மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil