குலசேகரப்பட்டினம் தசரா கொண்டாட்டம் : தசராப் பண்டிகையினை எங்கு சிறப்பாக கொண்டாடுவார்கள் என்று கேட்டால் உடனே மைசூரையும், கொல்கத்தா துர்கா பூஜையினையும் சொல்வார்கள். ஆனால் தமிழகத்திலும் மிகச் சிறப்பாய், மிகவும் சிறப்பாய் தசரா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதற்கு பெயர் போன முக்கியமான இடங்களில் ஒன்று தான் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் குலசேகரப்பட்டினம். குலசை என்று அழைக்கப்படும் குலசேகரப்பட்டினத்தில் கொண்டாடப்படும் முத்தாரம்மன் கோவில் தசரா பிரசத்தி பெற்ற ஒன்றாகும். புகைப்படக்காரர்கள் ஒரு நாளேனும் இங்கு தன்னுடைய தசராவினை கொண்டாடி கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளை படமாக்கமாட்டோமா என்று ஏங்குவார்கள் என்பது உண்மை.
குலசேகரப்பட்டினம் தசரா கொண்டாட்டம்
குலசேகரப்பட்டினம் தசரா கொண்டாட்டம் தல புராணம்
வரமுனி என்ற முனிவர் அகத்திய முனிவரை அவமரியாதையுடன் நடத்திய காரணாத்தால், அகத்தியர் அவருக்கு சாபம் ஒன்றை கொடுத்தார். அதில் வரமுனி மனித உடலும் எருமைத் தலையும் கொண்ட மகிசாசுரனாக வாழ்வாய் என்று அகத்திய முனிவர் சாபம் அளித்தார்.
முற்பாதியில் முனிவராக வாழ்ந்த வரமுனி பிற்பாதியில் அரக்கனாக வாழ்வினை நடத்தினார். அரக்கனான பின்பு அவர் மக்களுக்கு அதிக கொடுமைகள் செய்தார். தசரா விழாவில் காளி தேவி தோன்றி வரமுனியை வதம் செய்த இடமாக கருதப்படுகிறது குலசேகரப்பட்டினம். மேலும் படிக்க : ஆயுதபூஜை பற்றிய சிறப்புக் கட்டுரைத் தொகுப்பு
குலசேகரப்பட்டினம் தசரா கொண்டாட்டம்
குலசை முத்தாரம்மன் கோவிலில் 10 நாள் கொண்டாட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கும். தசரா அன்று பக்தர்கள் அனைவரும் காளி மற்றும் அரக்கன் வேசமிட்டு நடனமாடி வருவார்கள். பல்வேறு நிறங்களை அள்ளித் தெளித்தது போல் ஊரே காட்சி அளிக்கும். இந்தியா முழுவதில் இருந்தும் புகைப்படக் கலைஞர்கள் ஒன்று கூடி இந்த காட்சிகளை அழகாக படம் பிடிப்பது வழக்கம். இன்று நடைபெறும் மஹிசாசூரசம்ஹார விழாவிற்கு காவல் பணிக்காக 2000 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். நெல்லையில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள் ஒரு பார்வை
எப்படி செல்லலாம் குலசேகரப்பட்டிணத்திற்கு ?
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஊர். மணப்பாடு செல்லும் பேருந்தில் ஏறினால் அரைமணி நேரத்தில் குலசேகரப்பட்டிணம் வந்தடையலாம். கன்னியாகுமரியில் இருந்து 78 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஊர்.