DYFI protest against Agnipath scheme in Trichy: இந்திய பாதுகாப்பு துறையில் ஆண்டுக்கு 45 ஆயிரம் வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க 'Tour Of Duty' என்ற புதிய வேலைவாய்ப்பு முறையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு "அக்னி பாத்" என பெயரிடப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்தில் 17.5 வயது முதல் 21 வயதுடையவர்கள் முப்படையில் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில் மாத ஊதியம் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். ஓய்வூதியம் போன்ற சட்டரீதியான சலுகைகள் வழங்கப்படாது. அக்னி வீர் (Agniveer) என்றழைக்கப்படும் வீரர்கள் ராணுவம், விமானப்படை, கடற்படையில் கீழ்நிலை ஊழியர்களாக பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு மாத ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.
பணி காலத்தில் 45 லட்சம் ரூபாய் அளவில் இன்சூரன்ஸும், வீரர்கள் வீரமரணமடைய நேரிட்டால் 44 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: போதையில் டூவீலர் ஓட்டிய இளைஞர்: நூதன முறையில் தெளிய வைத்த தஞ்சை போலீஸ்
4 ஆண்டுகளில் தகுதி அடிப்படையில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே 15 ஆண்டுகள் என்ற நிரந்தர பணியில் சேர்க்கப்படுவார்கள். மீதமுள்ள 75% பேர் பென்சன் இன்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். மாறாக அவர்களுக்கு வரிப்பிடித்தமின்றி 11.4 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை பணப்பலன் வழங்கப்படும்.
இந்த பணப்பலனும் அரசால் முழுமையாக வழங்கப்படாது. வீரர்களின் மாத ஊதியத்தில் சேவா நிதி என மாதம் 9 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை பிடித்தம் செய்து அதே அளவு தொகையை அரசும் செலுத்தி அதற்கான வட்டியுடன் சேர்த்து 4 ஆண்டுகள் முடிவில் 12 லட்சம் ரூபாய் வரை வீரர்களுக்கு வழங்கப்படும் என்கிறது பாதுகாப்புத்துறை.
இந்தநிலையில், நிரந்தர வேலைவாய்ப்பை தட்டிப்பறிக்கும் மத்திய அரசின் இந்த வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். வடநாட்டில் ரயில் எரிப்பு சம்பவங்கள் அன்றாடம் நிகழ்கின்றன.
இந்த சூழலில் தமிழகத்திலும் முதல் எதிர்ப்பு குரலையும் போராட்டங்களையும் திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எடுத்துள்ளனர். அந்தவகையில் இன்று நண்பகல் திருச்சி ரயில் நிலையம் முன்பு அறப்போராட்டத்தை துவக்கினர்.
மத்திய மோடி அரசு ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை பணியில் அமர்த்த கூடிய “அக்னிபாத்” மசோதாவை கைவிடக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு போராட்டக்காரர்கள் ரயில் நிலையம் சென்றனர்.
போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை ரயில் நிலையம் செல்லும் சாலையிலேயே அவர்களை கைது செய்தது.
இந்தப் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் பா.லெனின் தலைமையில், மாநில இணை செயலாளர் தோழர் பாலசந்திரபோஸ், மாவட்ட தலைவரும், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான சுரேஷ், மாவட்ட துணை தலைவர் தோழர் கிச்சான், மாவட்ட நிர்வாகிகள் சேதுபதி, யுவராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கைதாகினர்.
அக்னிபாத் போராட்டம் முதற்கட்டமாக இன்று திருச்சியில் துவங்கப்பட்டிருப்பதாகவும், மத்திய அரசின் இந்த ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்புத் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் பல்வேறு வியூகங்களில் ஒன்றிய அரசுக்கு எதிராக நடத்தப்படும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.