மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுமார் 13 மணி நேரமாக நடைபெற்ற தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நிறைவடைந்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக, மதுரையைச் சோ்ந்த அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, மதுரை தபால்தந்திநகா் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை உதவி மண்டல அலுவலகத்தில், அங்கித் திவாரியின் அறையில் சோதனையிடுவதற்காக ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை மாலை சென்றனா்.
அங்கு அங்கித் திவாரியின் அறையில் உள்ள கணினி, அவா் கையாண்ட வழக்குகள் தொடா்பான ஆவணங்கள், லேப்டாப், இ-மெயில், வங்கிப் பரிமாற்றம் குறித்தும், கைப்பேசியில் தொடா்பு கொண்டவா்கள் குறித்தும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினா்.
சோதனை நடைபெற்ற அறையில் ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சத்தியசீலன் தலைமையிலான அதிகாரிகள், அமலாக்கத் துறை அதிகாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். இரவு 7 மணியளவில் தொடங்கிய இந்தச் சோதனை, சுமார் 13 மணி நேரமாக விடியவிடிய நடந்தது.
தமிழகத்தில் முதல் முறையாக மத்திய அரசு அலுவலகமான அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குள் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் நுழைந்து சோதனை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.
மேலும், மதுரை கோசாகுளம் பகுதியில் உள்ள அன்கித் திவாரியின் வீட்டிலும், லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் அவா் பயன்படுத்திய இரு லேப்டாப்களை பறிமுதல் செய்த போலீஸார், மேலும், சில ஆவணங்களையும் கைப்பற்றினா்.
இந்நிலையில் அங்கித் திவாரி 15 மணி நேர விசாரணைக்குப் பிறகு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜே.மோகனா முன் வெள்ளிக்கிழமை இரவு ஆஜா்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, அவரை வருகிற 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தலைமை நீதித்துறை நடுவா் உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: திண்டுக்கல்லில் இ.டி அதிகாரி கைது; மதுரை இ.டி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிரடி சோதனை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“