அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கர்நாடகா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கைக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழுவில் அ.தி.மு.க கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், 10 நாட்களில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள்: கலைஞர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு: 9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெறும் என அறிவிப்பு
இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் காலையிலும், மாலையிலும் 2 கட்ட அமர்வுகளில் இது தொடர்பாக ஆலோசித்தனர். இதில் கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஜூலை 11 அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் கர்நாடகா மாநில தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், ‘அ.தி.மு.க.,வின் திருத்தப்பட்ட விதிகள், நிர்வாகிகள் மாற்றம் ஏற்கப்பட்டது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil