Epass chennai : சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்ததாக சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் இருவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Advertisment
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமணம், இறுதிச் சடங்கு, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், முறையாக இபாஸ் விண்ணப்பித்தவர்களை விட இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து இபாஸ் பெற்றுக் கொண்டு பலரும் பயணிப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவின. மேலும், சென்னை காவல்துறைக்கு இதுக் குறித்த புகார் மனுக்களும் வந்தன.
இதனையடுத்து, அதிரடி சோதனையில் இறங்கிய சைபர் கிரைம் போலீசார் சென்னை தலைமைச் செயலகம் இ-பாஸ் வழங்கும் பிரிவில் பணியாற்றிய வருவாய் ஆய்வாளர்கள் குமரேசன், உதயா உட்பட டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இருவர், கால் டாக்சி ஓட்டுநர் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர்.
இவர்கள் 5 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.போலீஸ் விசாரணையில் இவர்கள் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் பெற்றுக்கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து வழங்கியதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil