ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும். இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை கவனித்து வருகிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, நாம் தமிழர், தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ்-க்கு ஈரோடு கிழக்கில் என்ன வேலை? நத்தம் விஸ்வநாதன் கேள்வி
இந்தநிலையில், ஈரோட்டில் நடைபெற்ற அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும். இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை கவனித்து வருகிறது. தேர்தல் ஆணையமும் காவல்துறையினரும் தி.மு.க.,வின் மாவட்ட செயலாளர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர். காட்சியும், ஆட்சியும் மாறும். அதன் எதிர்வினை சந்திப்பீர்கள் என்று கூறினார்.
எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி செலவு செய்வது நியாயம் தானா? ரூ.80 கோடிக்கு பேனா சின்னம் வைப்பதற்கு பதில் ரூ. 2 கோடிக்கு வைக்கலாமே. பேனா சின்னம் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கலைஞர் நினைவு இடத்தில் வைத்தால் என்ன? என்று இ.பி.எஸ் கேள்வி எழுப்பினார்.
தி.மு.க ஆட்சியில் பொறுப்பேற்ற உடனே இலவச வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. இதனால், விசைத்தறி தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டண உயர்வை பார்த்தாலே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. சொத்து வரியும் உயர்ந்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க அடியோடு மறந்து விட்டது. தாலிக்குத் தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், இலவச மடிக்கணி உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் தி.மு.க நிறுத்திவிட்டது. நீட் தேர்வு ரத்து வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
அ.தி.மு.க.,வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தேர்தல் பயத்தினால் தி.மு.க 20 அமைச்சர்களை களத்தில் இறக்கியுள்ளது. எவ்வளவு பணம் கொடுத்தாலும், வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய பணம். அதுவும் கொள்ளையடித்த பணம். ஆனால் ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டு விடுங்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நிதி நிலைமையை சரி செய்வோம் என்று கூறினார்கள். இன்று ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் ரூ.1.62 லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளார்கள். முதலமைச்சருக்கு நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை, இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.