ஈரோட்டியில் சாலை ஓரத்தில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த சிறுவனை ரஜினி மக்கள் மன்றத்தினர் சந்தித்தனர். அப்போது தனக்கு உதவிகள் எதுவும் வேண்டாம் என்றும் ரஜினி அங்கிளை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையோடு கேட்டுள்ளான்.
ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் யாசின், அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த வாரம், பள்ளிக்குச் செல்லும் வழியில் அவனது கண்களில் தென்பட்டது ஒரு பை. சாலையோரத்தில் நாதியற்று கிடக்கும் அந்தப் பையை திறந்து பார்த்த சிறுவன் திகைத்து நிற்கும்படி கத்தை கத்தையாக பணம். அவன் வயது பக்குவத்திற்கு அதை எண்ணிப் பார்க்கவும் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நிறைய பணம் உள்ளது யாரோ தொலைத்து விட்டார்கள் போல என்று எண்ணி வறுமையைக் கூட மனதில் நினைக்காமல் தன் கடமையைச் செய்தான். மொத்த பணத்தையும் ஆசிரியரிடம் ஒப்படைக்க, ஆசிரியர் அவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடந்ததைக் கூறினார். பணத்தைப் பார்த்து சிறுவனுக்கு வராத ஆசையைக் கண்டு வியந்த போலீசார், அவன் நேர்மைக்கு ஒரு சல்யூட் அடித்தனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் யாசினின் நேர்மையைப் பாராட்டி வாழ்த்துகளும் கூறினார்.
கிழிந்த சீருடை அணிந்திருந்த போதும் பணத்தின் மீது வராத ஆசை.. போலீசாரிடம் சல்யூட் வாங்கிய சிறுவன்!
யாசினின் நேர்மை செயலை பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் பலரும் இவனுக்குத் தேவையான உதவிகள் செய்ய முன்வந்தபோது யாசினின் பெற்றோர்கள் அதனை மறுத்துவிட்டனர். இந்த நிலையில் ஈரோடு ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் யாசின் மற்றும் அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். அப்போது யாசினுக்கு ஏதேனும் உதவிகள் தேவையென்றால் அதனைச் செய்ய தயாராக உள்ளதாகக் கூறினார்கள். இந்தக் காலத்தில் இது போன்ற நல்ல குணங்கள் உள்ள மனிதர்களைப் பார்ப்பது கடினம், யாசின் நல்ல மனிதனாக வளருவான் போன்ற வாழ்த்துகள் கூறினார்கள்.
ரஜினி மக்கள் மன்றத்தினர் தெரிவித்த வாழ்த்து நன்றி கூறிய யாசின், “உதவிகள் எதுவும் வேண்டாம். ஆனால் ரஜினி ஆங்கிளை நேரில் பார்க்கணும், நான் அவருடைய ரசிகன். எனக்கு அவரை பார்க்கணும் ரொம்ப நாள் ஆசை” என்று கூறியுள்ளான்.
நேர்மையாக வாழ நினைக்கும் இந்தச் சிறுவனின் ஆசையை விரைவில் பூர்த்தி செய்வோம், ரஜினிகாந்தை சந்திக்க ஏற்பாடுகள் செய்வோம் என்று மக்கள் மன்றத்தினர் உறுதி அளித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.