Advertisment

காவிரி ஆணையம் தொடர்பான துரைமுருகன் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது – பி.ஆர் பாண்டியன்

காவிரி ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அமைச்சர் துரைமுருகன் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது – விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர் பாண்டியன்

author-image
WebDesk
New Update
PR Pandian

பி.ஆர்.பாண்டியன்

காவிரி ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என அமைச்சர் துரைமுருகனின் கருத்துக்கு விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து இன்று அவர் செய்தியளர்களை சந்தித்து பேசியதாவது;

   காவிரி பாசன பகுதி வறண்டு போய் கிடக்கிறது. விவசாயிகள் பயிர்கள் கருகுவதை பார்த்து கண்ணீர் விட்டு கதறுகிறார்கள். சம்பா சாகுபடியை துவக்க முடியாமலும் பரிதவித்து வருகிறார்கள். உண்மை நிலையை தெரிந்து கொள்வதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்களையோ, உயர் அதிகாரிகளையோ தமிழக அரசு அனுப்பவில்லை. மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டங்களை கூட நடத்துவதற்கு முதலமைச்சர் முன்வராதது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இதையும் படியுங்கள்: காவிரி ஆற்றில் மணலில் புதைத்துக்கொண்டு விவசாயிகள் போராட்டம்; திருச்சியில் பரபரப்பு

  இன்றைய நிலையில் மேட்டூர் அணையில் இருக்கிற தண்ணீரை வைத்து குறுவையை தொடரவோ, சம்பா சாகுபடியை துவக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து உண்மை நிலையை புரிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு வாய்ப்பு இல்லாத நிலை தொடர்கிறது. காரணம் தமிழ்நாட்டில் முதலமைச்சரும் அமைச்சர்களும் நேரில் சந்தித்து பேசுவதற்கோ, விவாதிப்பதற்கோ முதல்வர் அனுமதிக்காததால் பல துறைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

   மேலும் தமிழக அரசு உயர் பதவியில் வட மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பெரும்பான்மை வகிப்பதால் தமிழக மக்களின் உண்மை நிலையை அனுபவப்பூர்வமாக அறிந்து செயல்படுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

   காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டு சில மாற்றங்களை செய்து உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கிய அடிப்படையில் காவிரி ஆறு, அதற்கு உட்பட்ட அணைகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஆறுகள், அணைகளில் வரும் நீர் முழுமையும் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு மூலம் அன்றாடம் கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பையும், நீர் வரத்தையும் கணக்கில் கொண்டு தமிழ்நாட்டின் தேவை அடிப்படையில் பாசனநீர் பகிர்ந்து அளிக்க வேண்டிய பொறுப்பு ஆணையத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

   இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக உண்மைக்கு புறம்பாக மூத்த அமைச்சர் துரைமுருகன் கருத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை விவசாய சங்கங்கள் வன்மையாக கண்டிக்கிறது.

   2007 காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதனை 2013 ஆம் ஆண்டு வரையிலும் அரசிதழில் வெளியிட அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் அரசு மறுத்துவிட்டது. 2013-ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசு இதழில் வெளியிட வைத்தார்.

   அதனை தொடர்ந்து 2014-ல் பிரதமர் மோடி தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழுவையும் அமைப்பதற்கு மோடி அரசு மறுத்தது. இதற்கு எதிராக ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார்.

   காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு மறுப்பதால் காவிரி நீரை பெறுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மிகப்பெரும் வறட்சியால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் அழிந்து வருகிறார்கள். நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அடிப்படையில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் காவிரி நீர் குறித்த அனைத்து நிர்வாக அதிகாரங்களும் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு திட்டமிட்டு தமிழகத்துக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய அரசு செயல்படுவதை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துரைத்தது.

   இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையத்தை தனது நேரடி பார்வையில் அமைக்க உள்ளதாகவும், அதற்கான குழு உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நீர் பாசனத்துறை செயலாளர்களை கொண்டு அமைத்திட வேண்டும். அதற்கான உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு சார்பில் அலுவல் சாராத, சட்டத்திலும் நீர் பாசனத்திலும் புலமைப் பெற்ற ஒருவரை தலைவராக நியமனம் செய்ய பரிந்துரைக்க வேண்டும். இக்குழுவில், மத்திய அரசின் நீர்ப்பாசனத் துறைசெயலாளர் நிரந்தர உறுப்பினராகவும், வேளாண்மை ஆய்வாளர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் புலமை மிகுந்த தலா ஒருவர் என 2 உறுப்பினர்களை மத்திய அரசு பரிந்துரைக்கலாம் அதனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து ஆணையத்தை அமைக்கும் என உத்தரவிட்டது.

   அதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆணையத்திற்கு நீர் பங்கீடு ஆலோசனை சொல்வதற்கும், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அன்றாடம் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்குவதற்காகவும் ஆணையம் எடுக்கும் முடிவை செயல்படுத்தும் நீர் பங்கீட்டு அதிகாரம் கொண்ட அமைப்பாக காவிரி நீர் பங்கிட்டு ஒழுங்காற்று குழு அமைத்திட வேண்டும். அக்குழுவில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நீர் பாசனத்துறை முதன்மை பொறியாளர்களை நிரந்தர உறுப்பினர்களாக கொண்டு அமைத்திட உத்தரவிட்டது.

   ஆணையத்திற்கான நிர்வாக அலுவலகத்திற்கான நிர்வாக செலவுகள் மற்றும் அதிகாரிகள் சம்பளம் உட்பட அனைத்தையும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது முற்றிலும் மத்திய அரசின் அலுவலக நிர்வாக பட்டியலில் இடம்பெறாது. அலுவலகம் உச்ச நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் செயல்படக்கூடிய தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும் என உத்தரவிட்டுள்ளது.

   மேலும் இதனை அடையாளப்படுத்துவதாக காவிரி மேலாண்மை அலுவலகத்தில் குடியரசு தலைவர் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்பதை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

   ஆண்டொன்றுக்கு 177 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டாலும், பற்றாக்குறை காலத்தில் எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

   ஆணையம் எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசிடம் ஆணையம் உதவி கோரும் பட்சத்தில் உரியமுறையில் உதவிட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலங்களும் ஆணைய உத்தரவை மதிக்க வேண்டும். மத்திய அரசோ, சம்பந்தப்பட்ட மாநிலங்களோ ஆணையத்தின் முடிவை ஏற்றுக் கொள்ள முன் வராத நிலையில் ஆணையம் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என வழிகாட்டப்பட்டுள்ளது.

   இந்நிலையில் முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தில் தேவை குறித்து முறையிடுவதற்கும், அவசரக் கூட்டத்தை கூட்ட கோருவதற்கும் சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சார்ந்த குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குழு உறுப்பினர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் நேரடி பிரதிநிதியாக இடம் பெற்றுள்ளனர்.

  எனவே, அவருடைய வேண்டுகோள் என்பது அரசின் அதிகாரப்பூர்வ வேண்டுகோளாகவும், முதலமைச்சரின் விருப்பமாகவும் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலையில் மத்திய அரசு ஆணையத்தின் முடிவில் தலையிடவோ, ஆணையத்தை தன் விருப்பத்திற்கு ஆதிக்கம் செலுத்தவோ உச்ச நீதிமன்றம் இடமளிக்கவில்லை என்பதை அமைச்சர் உணர வேண்டும்.

   மாநில அரசின் கடிதத்திற்கு மதிப்பளித்து பாதிக்கும் மேலான மாநிலங்களுக்கு உரிய தண்ணீரை பெற்றுத் தர ஆணையம் மறுக்கமேயானால் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக முறையிட்டு சம்பந்தப்பட்ட தீர்வு காண மாநிலங்களுக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  இதனை பின்பற்றி இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆணையத்தின் மீது முறையிடுவதற்கான வாய்ப்புகளை இதுவரையிலும் உருவாக்கவில்லை என தெரிய வருகிறது. காரணம் பிரதமருக்கோ, நீர் பாசனத்துறை அமைச்சருக்கோ கடிதம் எழுதி அவர்களை ஆணையத்தை வலியுறுத்த சொல்வது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பொருந்தாத ஒன்று, நடைமுறைக்கு ஏற்கத்தக்கது அல்ல.

   எனவே அரசியல் கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு காவிரி உரிமை என்பது சட்டரீதியாக பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கர்நாடக காவிரி பிரச்சனையில் அரசியலைப் புறந்தள்ளி வைத்து விட்டு தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

   இந்தியாவில் இதற்கு முன் மாநிலங்களுக்கு இடையே ஆறுக்கும் மேற்பட்ட ஆணையங்கள் நேரடியாக மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் மட்டுமே மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் அமைக்கப்பட்டிருக்கிற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

   எனவே இருக்கும் அதிகாரத்தை சட்டரீதியாக பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமே தவிர, ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று திசை திருப்பி அரசியலாக்கவும், மீண்டும் 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி காவிரி பிரச்சனையை கொண்டு செல்லவும் முயற்சிக்கக் கூடாது.

  எனவே ஆணையம் தண்ணீரை பெற்றுக் கொடுப்பதற்கு அவசர கால கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வந்தோம். தமிழ்நாடு அரசு அதை ஏற்க மறுத்து மத்திய அமைச்சரை சந்திப்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதுவதுமாக 2 மாதம் காலம் கடத்திவிட்டது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் அழிந்துவிட்டோம். இந்த அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கடமையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் தவறி இருக்கிறார். இழப்பிற்கு முழு பொறுப்பை தமிழக அரசு ஏற்க வேண்டும். ஒட்டுமொத்தமாக விவசாயிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்பட போகிறது, அடுத்த ஆண்டு அண்டை நாடுகளிலும், மாநிலங்களிலும் கையேந்தக்கூடிய நிலை ஏற்படப்போகிறது என எச்சரிக்கிறேன்.

  சென்னை உட்பட 32 மாவட்டங்களில் மிகப்பெரும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பேராபத்து ஏற்பட உள்ளது. சட்ட ரீதியாக தண்ணீரை பெறுவதற்கு அவசரகால வழக்குகளை பதிவு செய்வதற்கு மாற்றாக பிரதமருக்கு கடிதம் எழுதுவதன் மூலமாக பிரச்சனையை திசை திருப்ப முயற்சிப்பதையும், அரசியலாக்க முயல்வதையும் காவிரி டெல்டா விவசாயிகள் ஏற்க மாட்டோம்.

   தமிழ்நாடு அரசு வழக்கு தொடரும் என்று எதிர்பார்த்து வந்தோம். அதனை மறுத்து எங்களை அழிப்பதற்கு துணை போனதால் நாங்களே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

   குறிப்பாக தமிழ்நாட்டில் முதலமைச்சரும் அமைச்சர்களும் நேரடியாக சந்தித்து ஆலோசனைகள் நடத்துவது குறைந்துவிட்டது. அமைச்சர்கள் முதலமைச்சரை சந்தித்து முறையிடுவதற்கும் துறைகள் சார்ந்த கருத்துக்களை ஆலோசனை செய்வதற்கும், அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாய்ப்பு அளிக்காத நிலை தொடர்வதால் பலத்துறைகள் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனை முதலமைச்சர் கவனத்தில் கொண்டு அனைத்து துறைகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அன்றாட நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

   காவிரி டெல்டா பேரழிவு குறித்து உடனடியாக அவசரமாக மாவட்ட மற்றும் மாநில உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் கொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்வு காணுவதற்கும், பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cauvery Management Board Duraimurugan Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment