Advertisment

உழைக்கும் மக்களை ஒடுக்க நினைத்த கீழ் வெண்மணி படுகொலைகள்... 50-ம் ஆண்டு நினைவு தினம் இன்று...

அரைபடி நெல்லை கூலியாக உயர்த்தி கேட்டத்திற்கு ஏற்பட்ட கொடூர நிகழ்வு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கீழ் வெண்மணி படுகொலைகள்

கீழ் வெண்மணி படுகொலைகள்

கீழ் வெண்மணி படுகொலைகள் : 1950களுக்கு பின்பும் கூட , நிலப்பிரபுத்துவம் என்பதும் / பண்ணையாள் முறை என்பதும் வழக்கத்தில் நிலவி வந்தது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சையானது அன்று நாகை, திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தது.

Advertisment

நில உரிமையாளர்களாக உயர் வகுப்பினர் இருந்த காலக்கட்டத்தில், பட்டியல் இனத்தவர்கள் அந்நிலங்களில் அடிமைகள் போல வேலை வாங்கப்பட்டனர். உழைப்பிற்கு ஏற்ற ஊழியம் வழங்கப்படவில்லை.

இதனை எதிர்த்து கேள்வி கேட்ட போது, கூலியாட்களை அடித்துக் கொன்ற கொடூரமும் அரங்கியது அன்றைய தஞ்சையில். கூலியாக அரைபடி நெல்லை உயர்த்திக் கேட்டத்திற்கு இருவரை கட்டி வைத்து அடித்தே கொன்றனர் அங்கிருந்த நிலக்கிழாரின் அடியாட்கள். இதனை தட்டிக் கேட்க அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.

மேலும் படிக்க : தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கொலைகளமாகும் நவோதயா பள்ளிகள்

இடது சாரி சித்தாந்தமும் கீழ் வெண்மணி படுகொலைகள்

இடதுசாரி பொதுவுடமைக் கட்சியின் சித்தாந்தம், அன்று மிக வேகமாக உழைக்கும் வர்கத்தினரிடம் பரவி வந்தது. அதனைத் தொடர்ந்ந்து சங்கம் வைக்கவும், கூலியை உயர்த்திக் கேட்கவும், மரியாதையாக நடத்தவும் கேட்டுக் கொண்டு போராட்டங்கள் நடத்தினார்கள். அதில் கீழ் வெண்மணி கிராமமும் ஒன்று.

இதனை பொறுத்துக் கொள்ளாத நிலக்கிழார்கள், ஒன்று கூடி, இரிஞ்சூரில் இருந்து அடியாட்களை கீழ் வெண்மணிக்குள் இறக்கினர். கண்ணில் பார்ப்பவர்களையெல்லாம் தாக்க ஆரம்பித்தார்கள்.  உயிருக்கு பயந்து வயதானவர்கள், பெண்கள், மாற்றும் குழந்தைகள், கீழ் வெண்மணிக்கு தெற்கே இருக்கும் ஒரு சிறிய குடிசை வீட்டில் ஒளிந்து கொண்டனர். இன்று வரை அது ராமய்யா குடிசை என்று பலராலும் நினைவில் கொள்ளப்படுகிறது.

கையில் மண்ணெண்ணையுடன் வந்த நிலக்கிழார்கள் மற்றும் அடியாட்கள் அந்த வீட்டினைப் பூட்டி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். ஒரே இடத்தில் 20 பெண்கள் (இரண்டு கர்பிணிகள்) , 19 சிறுவர்கள் (அனைவரும் 13 வயதிற்கு குறைந்தவர்கள்), 5 ஆண்கள் (ஒருவர் 70 வயது பெரியவர்) கதறக் கதற நெருப்பில் எரிந்து சாம்பலானார்கள்.

1968ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 25ம் தேதி, நாகை மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம், அடக்கு முறைகளுக்கும் சாதியக் கட்டுப்பாடுகளின் கொடூர முகத்திற்கும் எடுத்துக்காட்டாய் இன்றும் நிற்கின்றது. இந்நிகழ்வு நடந்து, இன்றுடன் 50 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

எரிக்கப்பட்ட ராமய்யாவின் குடிசைக்கு எதிரே 44 பேரின் கைகள் சிலைகளாக வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த 44 பேரின் நினைவாக நினைவுத் தூணும் எழுப்பப்பட்டது.

இந்த பெரும் பிரச்சனைகளை உருவாக்கிய நிலக்கிழார்களில் மிகவும் முக்கியமான ஒருவர் கோபாலகிருஷ்ண நாயுடு. அவர் உட்பட இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் நிரபராதிகள் என்று ஏப்ரல் 6, 1973ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலைகளை  நேரில் பார்த்த நந்தன் என்ற சிறுவன் 12 வருடங்கள் கழித்து, 1980ம் ஆண்டு கோபாலகிருஷ்ண நாயுடுவை தன் நண்பர்கள் உதவியுடன் வெட்டி கொலை செய்தான்.

கீழ் வெண்மணி படுகொலைகள் 50வது நினைவு தினம் : பொதுவுடமைக் கட்சியினர் அஞ்சலி

வெண்மணியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இன்று அவ்வூரின் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலக்கிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நேரில் சென்று, நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினர்.  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், 5 கோடி ரூபாயில் நினைவாலயம் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 50வது நினைவு  தினம் கடைபிடிக்கப்பட்டது. அதற்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.

Thanjavur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment