கோவிட்-19 காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதை எதிர்கொள்வதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தமிழக சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தெலங்கானாவின் சுகாதார அமைச்சர் எடிலா ராஜேந்திரன் மற்றும் கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் கே சுதாகர் ஆகியோருடனான உயர்நிலைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
மத்திய சுகாதார குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த மூன்று மாநிலங்களிலும் கோவிட்-19 மேலாண்மைக்கான நிலைமைகள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், ஆயத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து காணொலியில் ஆலோசிக்கப்பட்டது.
டாஸ்மாக் கடைகளை உடனே மூட ஐகோர்ட் உத்தரவு: ஆன்லைனில் மது விற்க அனுமதி
கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில், மூன்று மாநிலங்களும் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படுவதற்கு ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்தார். கோவிட்-19 நோய்க்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், தற்போது நாட்டில், கோவிட்-19 நிலை குறித்தும் மாநிலங்களுக்கு அவர் தெரிவித்தார்.
"மத்திய அரசும், மாநிலங்களும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளினால், கோவிட்-19 நோய்க்கு எதிரான தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவிட்-19 நோய் சிகிச்சைக்கு என்று தனியாக அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனைகள் போதுமான அளவு அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தனிப்படுக்கைகள், தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள், தனிமைப்படுத்தப்படும் வசதி கொண்ட மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கோவிட்-19 காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதை எதிர்கொள்வதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.
போதுமான அளவு முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்புக் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைப்புகள் ஆகியவற்றுக்கு வழங்கி, மத்திய அரசு ஆதரவளித்து வருகிறது" என்றார்.
மேலும், கோவிட்-19 நிலைமை மாநிலங்களில் எவ்வாறு உள்ளன என்பது குறித்தும், அதை மாநிலங்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பது குறித்தும் விளக்கம் ஒன்றைப் பார்த்த பின்னர், நோய் உள்ளவர்களைக் கண்டறிவது, நோய் உள்ளவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களைக் கண்டறிவது, நோயை ஆரம்ப கட்டத்திலேயே பரிசோதித்துக் கண்டறிவது ஆகியவை இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்றும், இவை குறித்து மாநிலங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.
இதுவரை நோயால் பாதிக்கப்படாத மாவட்டங்களிலும், கடந்த 14 நாட்களாக இந்த நோய் இருப்பதாக அறிக்கை எதுவும் வராத மாவட்டங்களிலும், மேலும் தீவிரமாக Severe Acute Respiratory Infections (SARI) / Influenza Like Illness (ILI) குறித்து தீவிர கண்காணிப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்புடன் IDSP நெட்வொர்க் மூலமாக விவரங்கள் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். இதுபோன்ற நடவடிக்கைகள், தொற்று எங்கேனும் உள்ளதா என்பதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் அதைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார்.
சுகாதாரப் பணியாளர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதை தவிர்ப்பதற்காக அனைத்து சுகாதார அமைப்புகளிலும், தொற்று வராமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படுவதை மாநிலங்கள் உறுதி செய்யவேண்டும். மத்திய அரசின் அனைத்து விதிமுறைகளும், அறிவுரைகளும் கள அளவில் முழுமூச்சுடன் நடைமுறைப்படுத்தப்படுவதை மாநிலங்கள் உறுதி செய்யவேண்டும்.
திருமழிசை அங்காடியில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? - அறிக்கை கேட்டு உத்தரவு
நடமாடும் பரிசோதனை ஆய்வுக்கூடங்களை அனுப்புதல், தொற்று இல்லாத நோய்களுக்கான மருந்துகளை இரண்டு மாதங்களுக்குப் போதுமான அளவிற்கு, கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் முன்னதாகவே விநியோகித்தல், குடிசைப் பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை வீட்டிற்கே சென்று விநியோகித்தல், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு ஒரு மாற்றாக தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறுவதைப் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகள் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படுகின்றன என்று மாநிலங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடனும் ஹர்ஷ்வர்தன் மாவட்டங்களில் கோவிட்-19 மேலாண்மையும் நிலைமையும் எவ்வாறு உள்ளது என்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடினார். அனைவரும் இணைந்து செயல்படுவதற்கும், பணிகளில் ஏதேனும் இடைவெளிகள் இருக்கும் பட்சத்தில், அதை முழுமைப்படுத்தவும், பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும், தெளிவான தீர்வு காணவும் இதுபோன்ற கூட்டங்கள் உதவும் என்றும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.