தமிழகத்தைச் சேர்ந்தவரும் கர்நாடகா மாநில முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை அரசியலுக்கு வருவார் என்று ஐ.இ. தமிழ் ஏற்கெனவே செய்தி வெளியிட்டது இன்று நிஜமாகி உள்ளது.
தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த், சில மாதங்களுக்கு முன்பு தான் அரசியல் கட்சி தொடங்கினால், கட்சித் தலைமை வேறு ஆட்சி தலைமை வேறாக இருக்கும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த திட்டம் சாத்தியமில்லை என்று அரசியல் நோக்கர்கள் சிலர் கூறினாலும், ரஜினி முதல்வர் பதவிக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரியை மனதில் வைத்துதான் பேசுகிறார் என்று கூறப்பட்டது. அந்த ஐபிஎஸ் அதிகாரி வேறு யாருமல்ல, கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைதான் என்று ஐ.இ தமிழ் மார்ச்13-ம் தேதி செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், அண்ணாமலை தமிழகத்தில் அரசியலில் ஈடுபட உள்ளதாக ஃபேஸ்புக் நேரலையில் தெரிவித்து அவருடைய அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ளார்.
அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக் நேரலையில் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசுகையில், தமிழகத்தில் 2021 ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வருவதாக தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் சிங்கம் சூரியா என்று தனது அதிரடியான நடவடிக்கையால் அம்மாநில மக்களால் கொண்டாடப்பட்டவர் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை. நேற்று ஃபேஸ்புக்கில் லைவில் பேசும்போது கர்நாடகா மாநில மக்களை ரொம்ப மிஸ் பண்ணுவதாக தெரிவித்தார். பின்னர், “நான் தமிழக அரசியலில் நுழைய திட்டமிட்டுள்ளேன். அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடுவேன். அரசியலில் நுழைவதன் மூலம் அமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறேன்” என்று கூறினார்.
தமிழகத்தில் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, 2011-ம் ஆண்டு கர்நாடகா மாநில பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 2013-ல் கர்கலா துணைப்பிரிவின் ஏஎஸ்பியாக தனது காவல்துறை பணியைத் தொடங்கிய அண்ணாமலை, உடுப்பி மற்றும் சிக்கமங்களூரு மாவட்டங்களின் எஸ்.பி. ஆக இருந்தார். நேர்மையான மற்றும் கண்டிப்பான ஐபிஎஸ் அதிகாரியாக பெயர்பெற்ற அண்ணாமலை, உடுப்பி மாவட்டத்தில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோது, அந்த மாவட்ட மக்கள் அவரது பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரசாமி கர்நாடகா மாநில முதல்வராக இருந்தபோது, அண்ணாமலையை தானாக முன்வந்து பெங்களூரு நகர காவல்துறைக்கு பொறுப்பில் கொண்டுவந்தார். அந்த அளவுக்கு அவர் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். கடைசியாக அண்ணாமலை, பெங்களூரு தெற்குப் பகுதியின் துணை போலீஸ் கமிஷனராக இருந்தபோது ராஜினாமா செய்து பதவியில் இருந்து விலகினார்.
அண்ணாமலை நேற்று ஃபேஸ்புக்கில் பேசுகையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ‘வீ தி லீடர் பவுண்டேஷன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மக்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளதாக அண்ணாமலை கூறினார். மேலும், “நான் எனது பூர்வீக மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள மக்களுக்காக வேலை செய்யத் தொடங்கினேன். நான் எனது சொந்த நாட்டில் விவசாயத்தையும் செய்கிறேன். எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறேன்”என்று அவர் கூறினார்.
அண்ணாமலை தனது புத்தகத்தைப் பற்றியும் பேசினார். கடந்த சில மாதங்களாக அவர் ஒரு புத்தகத்தை எழுதுகிறார். அது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றார். இன்னும் இரண்டு மாதங்களில் புத்தகம் வெளியிடப்படும், மேலும், இந்த கொரோனா பொது முடக்க காலத்தை புத்தகத்தை எழுதி முடிக்க பயன்படுத்தினேன் என்று அவர் கூறினார்.
முன்னதாக, தனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுகாக எழுதிய கடிதத்தில், அவர் (ராஜினாமா செய்வதற்கான) முடிவு ஆறு மாதங்களுக்கும் மேலாக நன்கு யோசனை செய்த பிறகே எடுக்கப்பட்டது என்று கூறியிருந்தார். "கடந்த ஆண்டு, கைலாஷ் மானசரோவர் பயணம் எனது கண்ணைத் திறந்தது. ஏனெனில், இது வாழ்க்கையில் எனது முன்னுரிமை பணிகள் என்ன என்பதை அறிய உதவியது. மதுகர் ஷெட்டி ஐயாவின் மரணம் ஒரு வகையில் எனது சொந்த வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய வைத்தது” என்று அண்ணாமலை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான மதுகர் ஷெட்டி 2018 டிசம்பரில் ஹைதராபாத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நேற்றைய ஃபேஸ்புக் நேரலையில் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.