நக்கீரன் கோபால் கைது முதல் விடுதலை வரை : நக்கீரன் இதழில் கடந்த வாரம் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இன்று காலை புனே செல்வதற்காக நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையம் புறப்பட்டு வந்தார். ஆளுநர் பணியை செய்ய விடாமல் தலையிட்டதிற்காக நக்கீரன் கோபால் மீது இந்திய சட்டப்பிரிவு 124ன் கீழ் ஜாம்பஜார் காவல்நிலையத்தில் ஆளுநர் அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கைது தொடர்பான செய்தியைப் படிக்க
இந்த கைதினை கண்டித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன. முக. ஸ்டாலின், வைகோ, சீமான், தொல்.திருமாவளவன் போன்றோர்கள், பத்திரிக்கைச் சுதந்திரத்தை நெறிப்பதாக இந்த கைது நடவடிக்கை அமைந்திருக்கிறது என்று கூறினர். அவரை சந்திக்கச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தர்ணாவில் ஈடுபட அவரை காவல் துறை கைது செய்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க
அவருக்கு மருத்துவப் பரிசோதனை முடிக்கப்பட்ட பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி கோபிநாத் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நக்கீரன் கோபால் சார்பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜரானார்.
ஆளுநரின் பணியில் தலையிட்டதாக கூறி நக்கீரன் மீது வழக்க பதியப்பட்டிருந்தது. அதை சுட்டிக் காட்டிய வழக்கறிஞர் “அந்த புகாரில், ஆளுநரின் சார்பில் அளிக்கப்பட்டதிற்கான தகவல் ஏதும் இல்லை, பத்திரிக்கை பிரதிகள் எதையும் அந்த புகாருடன் இணைக்கவில்லை. ஆளுநரின் பணியை நிறுத்த பலத்தினை பிரோயோகிக்கவே இல்லாத நிலையில் இந்த வழக்கு அர்த்தமற்றது என்று வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி கோபிநாத் சட்டப்பிரிவு 124ன் படி நக்கீரன் கோபாலை கைது செய்வதில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்று காவல் துறை தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் கோபிநாத்.
வெளியில் வந்த நக்கீரன் கோபால் தன்னை நேரில் வந்து சந்தித்து பேசிய முக. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு தன்னுடைய நன்றியினைக் கூறிக் கொண்டார்.