கஜ புயலால் கடும் சேதத்துக்கு உள்ளாகி இருக்கும் டெல்டா மாவட்டங்களில் நிவாரணப் பணிக்காக ரூ15,000 கோடி நிதியை மத்திய அரசிடம் தமிழ்நாடு கேட்டிருக்கிறது. இது தொடர்பாக மத்தியக் குழுவை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார்.
மத்திய நிதித்துறை இணைச் செயலாளர் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நவம்பர் 23 இரவு சென்னை வந்தனர். நேற்று நவம்பர் 24ம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அந்தக் குழுவினர் சந்தித்து பேசினார்கள்.
இதைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மத்திய குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு மாலை 3.40 மணிக்கு சென்றனர்.
பின்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் இடமாக குளத்தூர் அருந்ததியர் காலனிக்கு அக்குழுவினர் சென்றனர். அங்கு புயல் தாக்கியதில் 15-க்கும் மேற்பட்ட குடிசைகள் இடிந்து கிடப்பதை ஆய்வு செய்தனர்.
அப்போது மத்திய குழுவினரை கண்டதும், அங்கு வீடுகளை இழந்த பெண்கள் காலில் விழுந்து கதறி அழத்தொடங்கினர்.
அவர்களுக்கு ஆறுதல் கூறிய மத்திய குழுவினர், “உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும், பாதிப்புகளையும் நேரில் கண்டறிவதற்காகத்தான் வந்திருக்கிறோம். யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு நியாயமாக செய்ய வேண்டியதை நிச்சயமாக செய்வோம்” என உறுதி அளித்தனர்.
கீரனூரில் குடியிருப்புகளில் இருந்த மக்களை வெளியேற்றிவிட்டு ஆய்வு மேற்கொண்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 5 நிமிடங்களில் ஆய்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட மத்திய குழுவினர் கந்தர்வக்கோட்டைக்கு சென்றனர். இரவு நேரமாகிவிட்டதால் 5 நிமிடம் ஆய்வு செய்துவிட்டு புறப்பட்டனர். அவர்களை கட்சியினர் மற்றும் போலீஸார் என 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நூற்றுக்கணக்கானோர் பின்தொடர்ந்து சென்றதால் தங்களது கோரிக்கைகளையும் குறைகளையும் தெரிவிக்க முடியாமல் போனதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதேபோல வடகாடு பகுதி விவசாயிகள் கூறியபோது, "மாவட்டத்திலேயே அதிக அளவு மரங்கள் இங்கு முறிந்து விழுந்த நிலையில் இரவு நேரத்தில் வந்து 5 நிமிடத்தில் ஆய்வை முடித்து விட்டு சென்றதால் கோரிக்கைகளை முழுமையாக தெரிவிக்க முடியவில்லை" என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
இறுதியாக கந்தர்வகோட்டை புதுப்பட்டிக்கு சென்று அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி, மாவட்டம் முழுவதும் உள்ள சேத விவரங்களையும், என்னென்ன பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் அறிக்கையாக தயார் செய்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விட்டு மதியம் 1 மணிக்கு மீண்டும் தஞ்சாவூர் திரும்புகிறார்கள். பிற்பகல் 2 மணிக்கு திருவாரூர் செல்கின்றனர்.
அங்கு மாலை 3.30 மணி முதல் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள். அன்று இரவு நாகப்பட்டினம் சென்று, ஓய்வெடுக்கின்றனர்.
நாளை (26ம் தேதி) காலை 7.30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்து விட்டு, இரவு புதுச்சேரி செல்கின்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு, “தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த ஆய்வறிக்கை நவ.27க்கு பிறகு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றார்.
இந்நிலையில், மின் சீரமைப்பு பணிக்கு முதற்கட்டமாக மத்திய அரசு 200 கோடி நிதியுதவி அளித்திருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.