Good governance index 2019 : Tamil Nadu tops the list : மாநிலங்களில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய மாநிலங்களில் சிறப்பான நிர்வாகம் எங்கு நடைபெறுகிறது என்பது குறித்து மத்திய அரசு நிர்வாக சீர்திருத்தத்துறை ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தேசிய நல்லாட்சி தினமான இன்று வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் சிறந்த நிர்வாகத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
18 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 11 வடகிழக்கு & மலை பகுதி மாநிலங்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. 5.62 புள்ளிகள் பெற்று தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 5.40 புள்ளிகளைப் பெற்று மகாராஷ்ட்ரா இரண்டாவது இடத்திலும், 5.10 புள்ளிகளைப் பெற்று கர்நாடகா மூன்றாவது இடத்திலும் 5.05 புள்ளிகளைப் பெற்று சத்தீஸ்கர் நான்காவது இடத்திலும், அதே புள்ளிகளைப் பெற்று ஆந்திரா ஐந்தாவது இடத்திலும் உள்ளது. குஜராத், ஹரியானா, கேரளா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம், தெலுங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, பீகார், கோவா ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ள நிலையில், உத்திரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளது.
மேலும் படிக்க : TNDTE Results 2019: தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் எப்போது? நேரடி லிங்க் இங்கே!
யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது. சண்டிகர், டெல்லி அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. லட்சத்தீவுகள் கடைசி இடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இமாச்சலப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. உத்தரகாண்ட், திரிபுரா, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடம் பிடித்துள்ளது. காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து போன்ற மாநிலங்களில் நிர்வாகம் சற்று முறையாக நடைபெறவில்லை என்றும் ஆய்வறிக்கை தகவல் அளித்துள்ளது.