சட்டத்துக்குப் புறம்பாக ஆசிரியை உமா மகேஸ்வரி மீது எடுக்கப்பட்டுள்ள பணியிடை நீக்க நடவடிக்கைக்கு சீமான், டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கையை விமர்சித்தார் என்பதற்காக கொடுங்குற்றம் புரிந்த கைதியைப்போல, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அலைபேசியைப் பறித்து வைத்துக்கொண்டு, ஆசிரியர் சு.உமாமகேசுவரியை மிரட்டியுள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
‘கல்வி செயற்பாட்டாளர்’ உமா மகேசுவரியை திமுக அரசுப் பணியிடை நீக்கம் செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்!@CMOTamilnadu @mkstalin
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) March 8, 2024
பள்ளிக்கல்வித்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், புதிய கல்விக்கொள்கையின் குறைபாடுகள் குறித்தும் தொடர்ச்சியாகக் குரல்… pic.twitter.com/HTJEaodYg0
தேசிய கல்விக் கொள்கையை முன்னிலைப்படுத்தி, அதனைத் தழுவியே தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படுவதைக் கண்டித்த பேராசிரியர் ஜவகர் நேசன் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் அரசின் மாநில உயர்நிலைக் கல்வி குழுவிலிருந்து தானாக விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, கல்விச்சிக்கல் தொடர்பாகவும், பள்ளிக்கல்வித்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் தமது அறிவார்ந்த சீர்திருத்தக் கருத்துகளைத் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக முன்வைத்து வந்த ஆசிரியர் உமாமகேசுவரி அவர்களை, ‘அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு அரசையே விமர்சிப்பாயா? தேசிய கல்விக் கொள்கையைத் தவறு என எப்படிக் கூறலாம்?’ என்ற தொனியில் மிரட்டி, சட்டத்திற்குப் புறம்பாக திமுக அரசு தற்போது பணியிடை நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.
திமுக அரசை யாருமே விமர்சிக்கக் கூடாதா? அதன் தவறான செயல்பாடுகளை எதிர்த்து யாரும் கேள்வியே எழுப்பக் கூடாதா? அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுவோரைப் பதவியிலிருந்து அகற்றித் தண்டிப்பதுதான் சமூகநீதி போற்றும் திராவிட மாடலா? இதற்குப் பெயர்தான் கருத்துச் சுதந்திரமா? பாஜக அரசு வர்ணாசிரம அடிப்படையில் கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த திமுக அரசு துடிப்பதேன்? அதனை எதிர்க்கும் கல்வியாளர்களை கடுமையாகத் தண்டிப்பது ஏன்?
பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களையும், அதன் மனுவாத சட்டங்களையும் கடுமையாக எதிர்ப்பதாக திமுக அரசு கூறுவதெல்லாம் வெற்று ஏமாற்று அரசியல் நாடகம் என்பதற்கு ஆசிரியர் உமாமகேசுவரி மீதான பணியிடை நீக்க நடவடிக்கை மற்றுமொரு சான்றாகும்.
ஆகவே, சட்டத்திற்குப் புறம்பாக ஆசிரியர் உமா மகேசுவரி மீது எடுக்கப்பட்டுள்ள பணியிடை நீக்க நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்து, அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’.
இவ்வாறு சீமான் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:
முகநூல் பதிவுக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி பணி இடை நீக்கம்: தமிழ் தேசிய பேரியக்கம் கண்டனம்
மேலும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கல்வி முறையில் உள்ள குறைகளை சுட்டிகாட்டிய ஆசிரியர் திருமதி. உமா மகேஸ்வரி அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது - திருமதி. உமா மகேஸ்வரி அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 8, 2024
தமிழக அரசின்…
’தமிழக அரசின் கல்வித்துறையில் நிகழும் குறைகளையும் மாணவர்களுக்கு தேவையான கல்வி முறைகள் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் எழுதி வரும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் உமா மகேஸ்வரியை அரசுக்கு எதிராக அவதூறு பதிவிட்டதாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த பதினைந்து நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேச முன்வராத தி.மு.க. அரசு, கல்வித்துறையில் நிகழும் குறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.
எனவே, ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பள்ளியில் பணியாற்ற அனுமதிப்பதோடு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு தொடக்கப் புள்ளியான ஆசிரியர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன், என்று டி.டி.வி. தினகரன் தன் ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.