முகநூல் பதிவுக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி பணி இடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்துக்கு தமிழ் தேசிய பேரியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ் தேசிய பேரியக்கம் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி செயல்பாட்டாளர் – அரசுப் பள்ளி ஆசிரியர் சு. உமா மகேசுவரி அவர்கள், கல்விச் சிக்கல் தொடர்பாகவும், பள்ளிக் கல்வியில் செயல்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் சமூக அக்கறையோடு, முகநூலிலும், கட்டுரைகள் – நூல்கள் வழியாகவும் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருபவர் ஆவார்.
அவரது அறிவார்ந்த கட்டுரைகள் இந்து தமிழ் திசை, சுவடி, நல்லாசிரியன், தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் உள்ளிட்ட பல ஏடுகளில் வெளிவந்துள்ளன. சன் நியூஸ், புதிய தலைமுறை, நியூஸ்7 தமிழ் போன்ற முதன்மைத் தொலைக்காட்சி ஊடகங்களிலும் கல்வி தொடர்பான அக்கறையான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
தமிழ் இந்து, பன்மைவெளி, பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட பல வெளியீட்டு நிறுவனங்கள், அவரது நூல்களை வெளியிட்டிருக்கின்றன.
சில ஏடுகளும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் அவரது கல்விச் செயல்பாட்டைப் பாராட்டி விருதுகள் வழங்கியிருக்கின்றன.
அரசின் கல்வி நடவடிக்கைகளை திறனாய்வு செய்வதோடு நிற்காமல், அரசுப் பள்ளிகளில் நிறைய பிள்ளைகளை சேர்ப்பதிலும், நலிந்த பிரிவு மாணவ, மாணவியருக்கு தன் குடும்பத்தின் சார்பில் மட்டுமின்றி, பல நலவிரும்பிகளையும் ஒருங்கிணைத்து உதவி செய்து வருகிறார்.
இதையும் படிக்க:
தி.மு.க அரசை கேள்வி கேட்கக் கூடாதா? ஆசிரியை உமா மகேஸ்வரி பணி இடை நீக்கத்திற்கு சீமான், டி.டி.வி எதிர்ப்பு
அண்மையில்கூட, அவர் பணியாற்றும் பள்ளிக்கு தனது நண்பர்கள் வழியாக சூரிய மின்சார சாதனங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார். பல்வேறு கல்வி உரிமை அமைப்புகளில் பங்கேற்று செயலாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கல்விச் சிக்கல் தொடர்பாக அவரது முகநூல் பதிவுகளை குற்றச்செயலாக சித்தரித்து, நேற்று (06.03.2024) மாவட்டக் கல்வி அதிகாரிகள், மூன்று மணி நேரத்திற்கு மேலாக மிரட்டல் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். அவரது கைப்பேசியைக் கைப்பற்றி வைத்துக் கொண்டு, மூன்றாந்தரக் காவல் நிலைய அதிகாரிகள் போல கெடுபிடிகள் செய்திருக்கிறார்கள்.
அரசாங்கத்தின் ஊதியத்தை வாங்கிக் கொண்டு, அரசின் கல்வித் திட்டங்களையும் கொள்கைகளையும் எப்படி விமர்சிக்கலாம், தேசியக் கல்விக் கொள்கையைத் தவறு என எப்படி எழுதலாம் என பலவாறான மிரட்டல் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (07.03.2024) மதியம், பள்ளிக்குச் சென்ற அவரை பள்ளிக்குள்ளேயே செல்ல விடாமல், வெளியிலேயே நின்றவாறு பணியிடை நீக்கம் செய்வதாக ஆணையை கொடுத்திருக்கிறார்கள்.
சட்டநெறிமுறைப்படி, குற்றக் குறிப்பாணைகள் கொடுத்து, முறையான விசாரணை ஏதும் நடத்தாமல், நேரடியாக பணியிடை நீக்கத் தண்டனையை அவருக்கு வழங்கியிருப்பது, முற்றிலும் சட்ட விரோதமானது மட்டுமின்றி, இதுபோல் மற்ற ஆசிரியர்கள் யாரும் மாணவர்களின் கல்வி உரிமை குறித்து, துணிச்சலாகப் பேசக் கூடாது என அச்சுறுத்துகிற முயற்சியுமாகும்!
ஆசிரியர் சு. உமா மகேசுவரி அவர்களுக்குரிய பேச்சுரிமையை பாதுகாக்க வேண்டிய கல்வித்துறை, முகநூல் பதிவுக்காக பணியிடை நீக்கம் செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறலுமாகும்.
எனவே, தமிழ்நாடு அரசும், பள்ளிக் கல்வித்துறையும் நடந்துள்ள அநீதியை நிறுத்தும் வகையில், ஆசிரியர் சு. உமா மகேசுவரி அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பணியிடை நீக்க ஆணையை திரும்பப் பெற்று, இடை நீக்கக் காலத்திற்குரிய ஊதியத்தோடு, அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்கங்கள், இதில் உடனடியாக கவனம் செலுத்தி, இந்த அநீதிக்கெதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.