Green Colored Container Caught in Coimbatore : கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆத்துப்பாலம் பகுதி. இங்கிருந்து கேரளாவிற்கு காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய தேவைப் பொருட்களை எடுத்துச் செல்ல இரவில் நிறைய கண்டெய்னர் லாரிகள் செல்வது வழக்கம்.
நேற்றிரவு பச்சை நிறத்தில் ட்ரெக் ஒன்று ஆத்துப்பாலம், தொண்டாமுத்தூர் பகுதியில் கட்டுப்பாடின்றி, அதிக வேகத்தில் சென்றுள்ளது. இதனைப் பார்த்த உள்ளூர்வாசிகள், அந்த கண்டெய்னரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பிடிப்பட்ட லாரியில் என்ன இருந்தது ?
அந்த வண்டியில் என்ன இருக்கிறது என்று விசாரணை நடத்தியதிற்கு, பெரிய இரும்பு கம்பியைக் கொண்டு, கேள்வி கேட்பவர்களை தாக்க முற்பட்டிருக்கிறார் லாரி ஓட்டுநர்.
இதனால் அங்கு விவாதமும், பிரச்சனையும் ஏற்பட லாரியை 300 பேர் சேர்ந்து சிறை பிடித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்த்துறையினர், மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மக்களை அப்புறப்படுத்த முற்பட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. கண்டெய்னரில் பணம் இருக்கலாம் என்று சந்தேகம் வர, பறக்கும் படையினர் அங்கு விரைந்தனர்.
டிஜிட்டல் லாக் போடப்பட்டிருந்ததால் அதனை திறக்க இயலவில்லை. மக்களும் கலைந்து செல்லாததால் தடியடி நடத்தி மக்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் காவல்த்துறையினர். நள்ளிரவு வரை நீடித்த இந்த பரபரப்பு அடங்கிய பின்னர், கண்டெய்னர் லாரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனை திறந்து பார்த்தால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தேயிலைகள் கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. இருப்பினும் அனைத்து பாக்கெட்டுகளையும் திறந்து பரிசோதனை செய்த பின்னரே தேயிலை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : அமெரிக்க சிகிச்சைக்குப் பின் விஜயகாந்தின் முதல் பேட்டி! – வீடியோ