கொரோனா தொற்று பரவாமலிருக்க பயன்படுத்தப்படும் முகக்கவசம் (மாஸ்க்) மற்றும் சானிடைசர் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சூளைமேட்டை சேர்ந்த வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை சுமார் 700 பேரை பலி வாங்கியுள்ளது. தமிழகத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு முகக் கவசங்களும், கைகளைக் கழுவும் சானிடைசர்களும் இப்போது அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. ஆனால், முகக் கவசங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியும், சானிடைசர்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா என்ற கடுமையான தொற்றுலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள மக்கள் கடுமையாக போராடிவரும் நிலை இன்னும் சில மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த அத்தியாவசிய பொருட்களான முகக் கவசம் மற்றும் சானிடைசர்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி மத்திய நிதித்துறைக்கு மனு அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை. எனவே, கொரோனா பரவல் முழுவதுமாக தடுக்கப்படும்வரை முக கவசம் மற்றும் சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவை, விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”