இன்று காலை வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலம் ஆனார். திருமணம் செய்யாமலே தனித்து வாழ்ந்து வந்த அவர் நடைபெற்று முடிந்த 2019ம் ஆண்டு இடைத்தேர்தலின் போது எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை பெற்றார் அவர். அந்த பகுதியின் நகர்மன்ற தலைவராகவும், மாவட்ட துணைச் செயலாளராகவும் அவர் பணியாற்றி வந்தார்.
இதய கோளாறு
இதயக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் கிரீன்வேஸில் அமைந்திருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர் பல்வேறு தொகுதி பணிகளை மேற்கொண்டு வந்தார். இருப்பினும் மீண்டும் இதய கோளாறு காரணமாக பாதிப்படைந்தார். பிப்ரவரி 1ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாட்களாக நாடித்துடிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
தொடர் மரணங்களால் சோகம் அடைந்திருக்கும் திமுக
சென்னை திருவெற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.பி. சாமி நேற்று உடல் நிலை கோளாறு காரணமாக நேற்று (27/02/2020) காலமானார். சட்டமன்றத்தில் 100 எம்.எல்.ஏக்களை கொண்டிருந்த திமுக நேற்று 99 ஆனது. இந்நிலையில் இன்று அந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருந்த திமுக எம்.பிக்கள் கூட்டம் இதனால் ரத்தாகும் நிலை உருவாகியுள்ளது.
திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி திடீர் மரணம்
தலைவர்கள் இரங்கல்
குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் மறைவுக்கு திமுக தலைவர் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். எளிமையான மனிதர், கடைக்கோடி தொண்டனிடமும் பணிவுடன் பழகும் நேயமிக்க மனிதர் என்றும் கூறினார் அவர்.
காத்தவராயன் இறப்பிற்கு ஆளுநரும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். காத்தவராயனின் மறைவு குடியாத்தம் மக்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.