எரிபொருட்கள் விலை உயர்வு : பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. காய்கறி விலை முதற்கொண்டு அனைத்துவிதமான பொருட்களின் விலையும் கூடியிருக்கிறது.
தற்போது சரக்கு லாரி வாடகை கட்டணத்தை உயர்த்துவது குறித்து லாரி புக்கிங்க் ஏஜெண்ட்டுகள் சம்மேளனம் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையின் பெயரில் லாரி வாடகை 22% முதல் 25% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது என்ற இந்த சம்மேளனத்தின் தலைவர் அறிவித்திருக்கிறார்.
எரிபொருட்கள் விலை உயர்வு : கனரக வாகனங்களின் வாடகை உயர்வு
மேலும் இந்த சம்மேளனத்தின் தலைவர் ராஜவடிவேல் இது குறித்து குறிப்பிடுகையில் சென்னையில் இருந்து சேலம் வரை சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்களில் வாடகை 8500 ரூபாயிலிருந்து 10000 ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது என்றும், வட மாநிலங்களுக்கு செல்ல இருக்கும் கனரக வாகனங்களின் வாடகை சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பற்றி படிக்க
ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வால் மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை கூடும் அபாயம் நிலவி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 6 ரூபாய் 81 காசுகள் வரை டீசலின் விலை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.