கரூர் மாவட்டத்தில் சோதனையிடச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் 9 இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (மே 26) சோதனை மேற்கொண்டனர். இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர், கேரளா மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: உதயநிதி அறக்கட்டளையின் ரூ.36.3 கோடி அசையா சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அசோக்குமார் என்பவரின் பங்களா வீட்டிலும், கரூர், கோவை ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட அரசு ஒப்பந்ததாரர்களின் இல்லம் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அசோக் என்பவர் வீட்டிற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தனர். அதேவேளை, வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தி.மு.க.,வினரும் புகார் அளித்தனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ”9 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தடுக்கப்பட்டு, அதிகாரிகள் தாக்கப்பட்டனர். செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் கொங்குமெஸ் சுப்ரமணி, செல்வராஜ் ஆகியோருடன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்துள்ளது. கும்பலாகச் சென்று அதிகாரிகளை தாக்கிவிட்டு, ரொக்கம், ஆவணங்களை அவர்களிடம் இருந்து பறித்துச் செல்லுமாறு செல்வராஜிடம் சுப்ரமணி கூறியது ஆடியோ மூலம் உறுதியாகிறது. இதை ஆதாரமாக காவல்துறையில் சமர்பிப்போம்,” என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பொதுநல மனுவை அவசர வழக்காகக் கருதி விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil