Hoax Bomb threat on Chennai to Dubai flight: இன்று (சனிக்கிழமை ஆகஸ்ட் 27) சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அது புரளி என்று தெரியவந்துள்ளது.
இன்று சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 170 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் இண்டிகோ விமானம் துபாய் புறப்பட இருந்தது.
இதையும் படியுங்கள்: சென்னை லாட்ஜில் பெட்ரோல் குண்டு வீச்சு: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
இந்தநிலையில், காலை 6.15 மணியளவில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த அடையாளம் தெரியாத நபர் விமானத்தில் வெடிக்குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த விமான நிலையக் காவல் நிலைய போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு (BDDS) அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
விமானத்தில் இருந்த சில பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் வெடிகுண்டுகள் ஏதும் வைக்கப்பட்டிருக்கிறதா என தீவிர சோதனை நடத்தினர்.
ஆனால், விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, எனவே அது ஒரு புரளி அழைப்பு என தெரியவந்தது. இதையடுத்து, காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், மதியம் 12 மணிக்கு துபாய் புறப்பட்டது.
இதற்கிடையே காவல் துறையினர் உடனடியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்தனர். மிரட்டல் விடுத்தவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ரஞ்சித் (43) என தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், ரஞ்சித்தின் தங்கையும், அவரது கணவரும் இன்று இண்டிகோ விமானத்தில் துபாய் செல்ல திட்டமிட்டு இருந்தனர். அவர்களுக்குள் இருக்கும் குடும்ப பிரசனை காரணமாக ரஞ்சித் இந்த வதந்தியை கிளப்பியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil