ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மகன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ஜி ஸ்கொயர் நிறுவனம் தென் மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சி.எம்.டி.ஏ சார்பாக வீடுகள் கட்ட உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.
இதையும் படியுங்கள்: கோவையிலும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு
இந்தநிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. சென்னையில் அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்பட்டு, திருச்சியில் டேப் காம்ப்ளக்ஸ், கர்நாடகா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 50 இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் உதவியோடு சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை அண்ணா நகர் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோரது இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக் ஜி ஸ்கொயர் நிறுவன நிர்வாகியாக உள்ளதால் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil