Institute of Eminence Anna university 69% reservation : உலக அரங்கில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம் பெற இந்தியாவில் 10 தனியார் மற்றும் 10 அரசு கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு நிதி ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை நடிவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டு வருகிறது.
Advertisment
இந்நிலையில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்து அறிவித்தது. தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீடு இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் என்று பலரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில் செவ்வாய் கிழமை நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். மேலும் சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் உயர்ந்தாலும் 69% இடஒதுக்கீட்டிற்கு எந்த வித பிரச்சனையும் வராது என்பதை உறுதி செய்ய மசோதா நிறைவேற்றப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதற்கான ஒப்புதலை மனிதவள மேம்பாட்டுத்துறை தமிழக உயர்கல்வித்துறையிடம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் இந்த கல்வி நிறுவனத்திற்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்க திட்டமிட்டிருக்கிறது. இதில் 25% அதாவது, ரூ. 250 கோடி ரூபாயை தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.