அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். சுமார் 150 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 'பிகில்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் மூலம் ஏ.ஜி.எஸ் ரூ.300 கோடி வரை லாபம் சம்பாதித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த வருமான விவரத்தை திரைப்படக் குழு மறைத்ததாகக் கூறப்பட்டது.
Advertisment
இந்த தகவல்களின் அடிப்படையில், ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் வருமானவரித்துறையினா் ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினா். இந்த சோதனையில் பிகில் திரைப்படத்துக்கு மதுரையைச் சோ்ந்த பைனான்சியரும், திரைப்படத் தயாரிப்பாளருமான அன்புச்செழியன் நிதி உதவி செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அன்புச்செழியனுக்குச் சொந்தமான மதுரை, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பிகில் பட ஹீரோ விஜய்க்கு பல கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருந்ததால், கடலூா் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.சுரங்கம் பகுதியில் 'மாஸ்டா்' திரைப்பட படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னை அழைத்து வந்து பனையூரில் உள்ள அவரது பங்களாவில் வைத்து விசாரித்தனா்.
சென்னை மற்றும் மதுரையில் கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற வருமானவரித்துறையினரின் சோதனை படிப்படியாக நிறைவடைந்தது. ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட், கல்பாத்தி எஸ் அகோரம் இல்லம் மற்றும் அன்புச்செழியன் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நான்கு நாள் சோதனையின் முடிவில், அன்புச்செழியன் 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பிற்கு வரி செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அன்புச்செழியன் வீட்டில் இருந்து 77 கோடி ரொக்கம், 1.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழலில், அன்புசெழியன், கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு முறையாக சம்மன் அனுப்பி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். சம்மன் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து 'தினத்தந்தி' வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மற்றும் மதுரையில் நடந்த வருமானவரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு முறையாக மதிப்பிடப்பட்டு வருகிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், அதாவது அசையா சொத்துகளில் முதலீடு செய்வதற்கு தேவையான நிதி எங்கு இருந்து வந்தது? எப்போது, எங்கு எல்லாம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது?
இவர்களிடம் கேட்பதற்காக கேள்விகளும் தயாரித்து வைத்து உள்ளோம். விரைவில் முறையாக சம்மன் அனுப்பி, சம்பந்தப்பட்டவர்களை அலுவலகத்துக்கு வரவழைத்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் பெற முடிவு செய்து உள்ளோம். அவர்கள் தெரிவிக்கும் தகவல்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு டெல்லியில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு தலைமையிடத்துக்கு அனுப்பி வைக்கப்படும்" என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"