Advertisment

திமுக.வுக்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு: ஜெ.அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் - தலைவர்கள் இரங்கல்

மு.க ஸ்டாலின் இரங்கல் : நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தார்க்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாச முகம் காண்பேன்?

author-image
WebDesk
Jun 10, 2020 09:28 IST
திமுக.வுக்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு: ஜெ.அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் - தலைவர்கள் இரங்கல்

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் இன்று காலை 8 மணியளவில் காலமானார்.

Advertisment

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 2ம் தேதி கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வரமாக தீவிர சிகிச்சையில் இருந்த அன்பழகன், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உயிர் இழந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது . அன்பழகன் மறைவு குறித்த விவரம் உள்துறை, மத்திய சுகாதாரத்துறை கவனத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த அன்பழகனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் உரை:  

“என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை!”

இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வரவேண்டும்? திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், தலைவர் கலைஞரின் அன்பையும் ஆதரவையும் அளவின்றிப் பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தே விட்டார் என்ற செய்தியை ஏற்க ஏனோ என் மனம் மறுக்கிறது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க, தி.மு.கழகம் முன்னெடுத்த செயல்திட்டங்களைச் சிறப்புடன் நிறைவேற்றுவதற்காக சிறிதும் ஓய்வின்றி களப்பணியாற்றி, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்கள், சிகிச்சை பலனின்றி இன்று (10-6-2020) நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

கழக ரத்தம் பாய்ந்த உடல், கலைஞர் ஒருவரே தலைவர் என்ற உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் தகுதி மிக்க துணிவு, மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காமல் போராடும் வீரம், மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கும் வல்லமை என உறுதியுள்ள உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர் சகோதரர் ஜெ.அன்பழகன்.

மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தி, பொதுவாழ்வின் தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் ஜெ.அன்பழகனை நான் எப்படி மறப்பேன்? என்னை நானே தேற்றிக் கொள்ள முடியாமல் தேம்பி அழும் நிலையில், சகோதரர் அன்பழகன் அவர்தம் குடும்பத்தார்க்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது அவருடைய பாசமுகம் காண்பேன்?

ஜெ.அன்பழகனின் பொதுவாழ்வு – கழகப்பணி - தியாக உணர்வுக்குத் தலைவணங்கி, கண்ணீர் பெருக்குவதன்றி, வேறு வழி எனக்குத் தெரியவில்லை. கழகத்தின் தீரமிக்க உடன்பிறப்பு - மக்கள் பணியிலேயே தன்னுயிர் ஈந்த அன்புச்சகோதரர் ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கழகத்தின் சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கழகக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதுடன், கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்து, ஜெ.அன்பழகன் அவர்களின் தியாக வாழ்வைப் போற்றுவோம்! திராவிட இயக்கம் மறவாது அந்தத் திருமுகத்தை! என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

J Anbazhagan Death Live : சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் மரணம் – தனியார் மருத்துவமனை

ஜெ.அன்பழகன் மறைவு தாங்க இயலாதது! - வைகோ இரங்கல்

“ஒன்றிணைவோம் வா” என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விடுத்த அழைப்பினை ஏற்று, உயிருக்கே ஆபத்து நேரிடக்கூடும் என்பதை மறைத்து, கொரோனா நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், மலை குலைந்தாலும் நிலை குலையாத மாவீரன் ஜெ.அன்பழகன், அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சூரன், தலைவரின் கட்டளை என்றால், கணப் பொழுதில் உயிரையும் பணயம் வைக்கும் உத்தமத் தொண்டன் ஆவார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உயிரான சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்கள், நெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே என்று பகைவர் கூட்டத்தை எச்சரிப்பவர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் சண்டமாருதமாய் முழங்கியவர்.

அவரது தந்தையார் பழக்கடை ஜெயராமன், சென்னை மாநகரில் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்த முன்னோடிச் செயல்வீரர்களுள் ஒருவர் ஆவார்.

1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், திரு ஜெ.அன்பழகன் அவர்கள், அன்றைய தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் தளபதி ஸ்டாலின் அவர்களையும், என்னையும் வைத்து, எம்.ஜி.ஆர். நகரில் கொட்டிய மழைக்கு நடுவே பொதுக்கூட்டத்தை நடத்தி, எங்கள் இருவருக்கும் தங்கக் கணையாழி அணிவித்தார்.

மாறாத மந்தகாசப் புன்னகையோடு, மாற்றாரையும் ஈர்க்கின்ற அன்பு தவழும் புன்சிரிப்போடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று இயக்கத்திற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டு, கட்சியின் புகழ் ஓங்குவதற்கான பணியில் தன்னை ஈடுபடுத்தியவாறு உயிர் நீத்ததன் மூலம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்றில் அழியாத புகழ் இடத்தைப் பெற்றுவிட்டார் அன்பழகன்.

இந்தக் கொடுந்துயரைத் தாங்க முடியாமல் தி.மு.கழகத் தலைவர் தவிக்கின்றார். அவருக்கும், அன்பழகன் அவர்களின் குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளுக்கும் ஆறுதல் தேறுதல் கூற முடியாது என்ற நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன் என்று வைகோ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

முதலவர் எடப்பாடி பழனிசாமி:  திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

அமமுக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இரங்கல் : தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவால் அவர் மறைந்தது நமது வேதனையை அதிகமாக்குகிறது.

கொரோனா ஆபத்து சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன். அதன்படி தொடர்ந்து நடப்பதுதான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு :

 

கனிமொழி: திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

 

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:  ஜெ.அன்பழகனின் காலையில் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அவரது தொகுதி மக்களுக்கும், அவரது கட்சிக்கும் எனது மனமார்ந்த இரங்கல். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

#J Anbazhagan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment