Jacto Geo High level committee Meeting : 9-வது நாளாக இன்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆரம்பப் பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, பணியிடை நீக்கம் செய்தது தமிழக அரசு. இந்நிலையில் நேற்று ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக பணியில் வந்து சேருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க இன்று மதியம் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு ஆலோசனையில் ஈடுபட உள்ளது.
மேலும் ஜாக்டோ -ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “எங்களின் கோரிக்கைகளை தளர்த்திக் கொள்வது தொடர்பாக, முதலமைச்சரிடம் நேரில் பேச தயார்” என்று கூறியுள்ளார்.
சம்பளம் நிறுத்தி வைக்க உத்தரவு
அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. வங்கிகளின் கருவூலத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் வங்கிகள் சம்பளத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
நேற்று மாலை வரை (29/01/2019) வரை பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்களின் கணக்கெடுப்பு முடிவுக்கு வந்த அதன் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளிக் கல்வித்துறையில் 950 ஊழியர்களும், தொடக்கக் கல்வித் துறையில் 4350 நபர்களும் வேலைக்கு வரவில்லை. பள்ளிக் கல்வித் துறையில் 99.9% ஊழியர்கள் தங்களின் வேலைக்கு திரும்பிவிட்டதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்கள், மக்கள் நலன் கருதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். திமுக ஆட்சி அமையும் வரை அமைதியாக பொறுமை காக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை நேரில் அழைத்துப் பேசி தீர்வு காண முடியாத ஒரு முதல்வரிடம், இனியும் நியாயம் எதிர்பார்ப்பது தவறு.
திமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்கவும்; ஆட்சி அமைந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதோடு, அதிமுக அரசின் அராஜக நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்! pic.twitter.com/JF0gLaqjmp
— M.K.Stalin (@mkstalin) 30 January 2019
இன்று காலை 99 சதவிகத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதாக அரசு அறிவித்திருக்கும் நிலையில், போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாளை மறுநாள்(பிப்.1) முதல் தொடர் வேலை நிறுத்தம் அறிவித்திருந்த தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர், முதல்வரின் கோரிக்கையை ஏற்று வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் தலைவர் அந்தோணி சாமி, "முதல்வரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிடுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் இதுவரை 3520 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 1200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கி உள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில், 9 நாட்களாக நடைபெற்று வந்த ஜாக்டோ-ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்நிலைக் குழு அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.