ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு : ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளை முதல் நடத்த உள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் ஒரு பிரிவான ஜாக்டோ-ஜியோ அமைப்பு புதிய ஓய்வு ஊதியம் முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வுக்கு பிறகு வழங்கபடாமல் இருக்கும் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஊதிய முன்பாடுகளை களைய வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.
இதை நிறைவேற்ற கோரி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர். ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே அறிவித்தப்படி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு
இந்நிலையில் இந்த போரட்டத்திற்கு தடை விதிக்க கோரி சட்டபஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு முன் முறையிடப்பட்டது. கஜா புயல் நிவாரணப் பணிகள் நடந்து வரும் நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என அந்த அமைப்பில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இந்த விவகாரத்தை எப்படி கையாள வேண்டும் என்பது அரசுக்கு தெரியும் எனக் கூறிய நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டனர். இது சம்பந்தமாக மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இதனையடுத்து தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வில் சட்டப் பஞ்சாயத்து சார்பில் முறையிடப்பட்டது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வும் சட்டப் பஞ்சாயத்து அமைப்பின் முறையீட்டை நீதிபதிகள் மறுத்து விட்டனர். அவசர வழக்கவும் விசாரிக்க மறுத்துவிட்டனர்.
மேலும் படிக்க : முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த ஜாக்டோ ஜியோ அமைப்பு
ஆனால் வருகின்ற 10ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடக்க இருப்பதால், போராட்டத்தினை ஒத்தி வைக்க இயலுமா என்று ஜாக்டோ - ஜியோ சார்பில் வாதாடிய வழக்கறிஞரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதனை அடுத்து டிசம்பர் 10ம் தேதி வரைக்கும் போராட்டத்தை தள்ளி வைப்பதாக ஜாக்டோ-ஜியோ சார்பில், நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டது.