Jacto Geo Teachers Strike : தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆசிரியர் சங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு கடந்த 22ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகிய 420க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று அனைவரும் தங்களின் வேலைக்கு செல்லவில்லை என்றால், கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும் எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க : போராட்டத்தில் ஈடுபட்ட 420 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
Jacto Geo Teachers Strike - தமிழக அரசு எச்சரிக்கை
மேலும், பள்ளி செல்ல விரும்பும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அழைப்பு விடுத்தால் எந்த நேரத்திலும் நாங்கள் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி கூறியிருந்தார்.
ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், ஜாக்டோ-ஜியோவின் வழக்கு நிலுவையில் இருக்கின்ற நிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது இந்த வழக்கும். பணிக்கு ஆசிரியர்கள் திரும்பாவிடில், தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்களை 10,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் முடிவிற்கு வந்துள்ளது தமிழக அரசு.
18:20 PM - தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா? என ஆசிரியர் சங்கங்கள் நாளை தெரிவிக்க உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
18:00 PM - 'சிறையில் இருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை விடுவிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோரிடம் காவல்துறை கடுமையாக நடந்துகொள்கிறது. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்; ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்' - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் பேட்டி
17:35 PM - ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பிப்.1ஆம் தேதி முதல் தலைமைச் செயலக அரசு பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
17:15 PM - தொடக்கப் பள்ளிகளில் 63.78% ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை; 1,50,836 ஆசிரியர்களில் 50,288 பேர் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர் - தொடக்கக்கல்வி இயக்ககம்.
16:45 PM - 'அரசின் நிதி நிலை தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. போராட்டம் நடத்த மாட்டோம் என்ற உத்தரவை திரும்பப்பெற்றதால் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது' என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும், 'நீங்கள்(ஜாக்டோ -ஜியோ) ஆரம்பத்திலேயே நீதிமன்றத்தை அணுகவில்லை. வேலை நிறுத்தத்தில் தான் ஈடுபட்டீர்கள் என்று கூறிய நீதிமன்றம், அரசும் போராட்டக்காரர்களும் பேச்சுவார்த்தை மூலமே சுமூக தீர்வு காண வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
16:30 PM - ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது.
16:00 PM - போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை அழைத்து சுமூக தீர்வு எட்ட ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? - மதுரை உயர்நீதிமன்றக்கிளை கேள்வி
15:35 PM - திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியரின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதிமுக அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
15:25 PM - திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி செய்முறைத் தேர்வுகள் தொடங்கும்; தேர்வுத்துறை பணியாளர்கள் போராட்டத்தால் செய்முறை தேர்வில் பாதிப்பு இருக்காது என தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
15:00 PM - காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் 5% பேர் பணிக்கு திரும்பினர்; மீதமிருக்கும் காலிப்பணியிடங்கள் பிறகு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும். பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் விரும்பும் இடங்களுக்கான இடமாறுதலும் தொடங்கியிருக்கிறது என பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
14:20 PM - வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத ஆசிரியர்களில் பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அவர்கள் விரும்பிய இடத்தில் டிரான்ஸ்பர் கொடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதாவது, இன்று மாலைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பாவிடில், அவர்களது இடம் காலியானதாக அறிவிக்கப்படும். அந்த குறிப்பிட்ட காலி பணியிடத்தில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத ஆசிரியர்களில் யாரேனும் பணியிட மாற்றம் கோரியிருந்தால், அவர் அந்த இடத்திற்கு மாற்றம் செய்யப்படுவார் என அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
14:00 PM - நெல்லையில் பணியாற்றும் 21,423 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களில் 18,706 பேர் பணிக்கு வருகை; 2,399 பேர் பணிக்கு வரவில்லை, 318 பேர் விடுப்பில் உள்ளனர் - மாவட்ட கல்வித்துறை தகவல்.
13:50 PM - காஞ்சிபுரம் அருகே ஊத்துக்காடு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் முன்னாள் மாணவர்கள் பாடம் நடத்தினர். பள்ளியில் 100 மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் இருவர் பாடம் நடத்தினர்.
13:20 PM - ஆசிரியர்கள் ஸ்டிரைக் தொடர்பாக தலைமைச் செயலாளருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான ஆலோசனையை தொடர்ந்து தலைமைச் செயலாளருடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
12:40 PM - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும். 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அழைப்பு.
12:00 PM - சென்னையில் தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் பணியை புறக்கணித்து போராட்டம். ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
11:45 AM - தமிழகம் முழுவதும் போராடிவரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
11:30 AM - சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு.
11:15 AM - உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம். புதிய ஆசிரியர்கள் வேண்டாம், பழைய ஆசிரியர்களையே மீண்டும் நியமிக்க கோரி 200க்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டம்.
11:00 AM - நடைபெற இருக்கும் ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் தலைமை செயலக ஊழியர்கள், நிதித்துறை ஊழியர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் 130 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.