மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisment
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Advertisment
Advertisements
அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், தற்போது அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த வீட்டை சோதனையிட்ட வருமான வரித் துறையினர், அதில் ஒரு பகுதியை சீல் வைத்துள்ளதாகவும், சோதனையின் அடிப்படையில் வருமான வரித் துறை இதுவரை எந்த இறுதி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதவிர, அந்த மனுவில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம், விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
பல விசாரணைகளில் சம்பந்தப்பட்டுள்ள அந்த வீட்டை, அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்ற முடியாது எனவும், வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதியைச் சேர்ந்த 108 பேர் ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகவும், இதுதொடர்பாக அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு காணொளி காட்சி மூலம் விசாரித்தது. அப்போது, போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு இ–மெயிலில் அனுப்பிய கடிதத்தை பரிசீலிக்கும்படி கோரிய வழக்கை எப்படி விசாரணைக்கு ஏற்க முடியும்… இந்த வழக்கு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கை திரும்பப் பெற டிராபிக் ராமசாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“