ஜெயலலிதாவின் கனவான மோனோ ரயில் திட்டம் ரத்து! சட்டசபையில் அமைச்சர் தகவல்

இடப்பற்றாக்குறை, மெட்ரோ ரயில் பணி நீட்டிப்பால் கொள்கை அடிப்படையில் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் கனவு திட்டமான மோனோ ரயில் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக சட்டபேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, 2001 – 06 ஆட்சி காலத்தில், சென்னையில் மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். ஆனால் ஆட்சி காலம் முடியும் வரையில் அந்த திட்டம் தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை.

அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக (2006-11) மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தது. மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தீவிர நடவடிக்கை எடுத்து. அவர்கள் ஆட்சி காலம் முடியும் வரையில் கட்டுமான பணிகள் முடிவடையவில்லை.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2011-2016 ஆட்சி காலத்தில் மீண்டும் மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தது. அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, திட்டம் தொடர்பான அறிக்கையை தயாரிக்க உத்தரவிட்டார். டெண்டர் அறிவிக்கும் பணியில் தீவிரமாக இருந்தார். ஜெயலலிதாவின் கனவு திட்டம் என்பதால் தீவிரமாக இருந்தார். இந்த காலகட்டத்தில் ஜெயலலிதா மெட்ரோ ரயிலை திறந்து வைத்தார். கடைசி வரையில் மோனோ ரயில் திட்டம் செயல்பட்டுத்தபடவே இல்லை.

இந்நிலையில் மீண்டும் ஆட்சியை அதிமுக கைப்பற்றியது. ஆனால் ஜெயலலிதா யாரும் எதிர்பாராதவிதமாக மறையவே, பல்வேறு குழப்பங்களுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். 2017ம் ஆண்டு சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் மோனோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று சட்டசபை கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, ‘‘மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டதாக’’ அறிவித்தார். ’’இடப்பற்றாக்குறை, மெட்ரோ ரயில் பணி நீட்டிப்பால் கொள்கை அடிப்படையில் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

×Close
×Close